Jun 8, 2025 - 11:13 AM -
0
பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசேட ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலையின் அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அந்த வழிகாட்டல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுவதற்கு, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017 ஆகிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய வழிகாட்டல் பத்திரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து பாடசாலை வளாகங்களையும் நும்புகள் பெருகாதவாறு பராமரிக்க, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உகந்த உள் செயற்திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இதன்மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், பிரிவெனாக்களின் பரிவேனாதிபதிகள், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் மாகாணத்தில் உள்ள ஏனைய கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது, வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் பதிவாகினால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

