Jun 11, 2025 - 10:47 AM -
0
இந்தியாவின் GIFT நகரத்தில் உள்ள தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனை (NSE IX) இல் பத்திரத்தைப் பட்டியலிடும் முதல் வெளிநாட்டு நிறுவனம் என்ற அந்தஸ்தை DFCC வங்கி PLC பெற்றுள்ளது. இது இலங்கையின் மூலதனச் சந்தைகளில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிப்பதோடு, நிலைபேறுமிக்க நிதியத்தில் பிராந்தியத் தலைவராக DFCC வங்கியின் தரத்தை வலுப்படுத்துகின்றது.
இந்தப் பட்டியல், இலங்கையில் முதன்முதலில் வெளியிடப்பட்ட DFCC வங்கியின் பசுமைப் பத்திரத்திற்கான ஒரு மூலோபாய பன்முகப் பட்டியல் பயணத்தை நிறைவு செய்கிறது. இலங்கைக்கு அடுத்ததாக லக்சம்பர்க் பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள சமீபத்திய பட்டியல், சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கான வங்கியின் அணுகலை மேலும் வலுப்படுத்துகிறது. அத்தோடு, அளவிடக்கூடிய, எல்லை தாண்டிய நிலைபேறுமிக்க நிதிக்கான வங்கியின் உறுதிப்பாட்டையும் இது வெளிப்படுத்துகின்றது.
2025 ஜூன் 9ஆம் திகதியன்று, மணியை ஒலிக்கவிடுவதன் மூலம் பட்டியலைக் குறிக்கும் விழா, GIFT நகரத்திலுள்ள Grand Mercureஇல் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சர்வதேச நிதிச் சேவைகள் மைய அதிகாரசபையின் தலைவர் திரு. ராஜாராமன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இவருடன், தேசிய பங்குச் சந்தை, சர்வதேச நிதிச் சேவைகள் மைய அதிகாரசபையின் பிரமுகர்கள் மற்றும் GIFT நகரத்தை தளமாகக் கொண்டியங்கும் வங்கிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். DFCC வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திமால் பெரேரா மற்றும் திறைசேரி மற்றும் முதலீட்டு வங்கியியல் பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் பிரின்ஸ் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
“ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது என்பதற்கு அப்பால், இந்த பட்டியல்படுத்தலானது நம்பகமான, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட நிதி மூலம், பிராந்தியத்துடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயாராக உள்ளது என்பதை அடையாளப்படுத்துகின்றது” என DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திமால் பெரேரா குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட முதல் வெளிநாட்டு நிறுவனமாக தடம் பதித்துள்ளதன் மூலம், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள் உலகளாவிய தரநிலைகளுக்கு பொருந்தக்கூடிய நிலையான மூலதனத்தை எவ்வாறு உருவாக்கி வளர்க்க முடியும் என்பதை DFCC வங்கி எடுத்துக்காட்டுகின்றது. வர்த்தக புத்தாக்க விடயங்களை காலநிலை முன்னுரிமைகளுடன் இணைப்பதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகளை இந்த மூலோபாய சாதனை பிரதிபலிக்கின்றது. நடைமுறை சாத்தியமான மற்றும் நோக்கம் சார்ந்த செயற்படுத்தல் மூலம் தெற்காசியாவின் நிதிக் கட்டமைப்புகளை சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தப் பட்டியல்படுத்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையின் நிர்வாகப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு. வி. பாலசுப்ரமணியம், “தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனை (NSEIX) மற்றும் GIFT IFSCயில் முதல் வெளிநாட்டு நிறுவன வெளியீட்டாளராக DFCC வங்கி PLCஐ வரவேற்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். பரிவர்த்தனையில் அவர்கள் ரூபாய் 2.5 பில்லியன் பசுமை பத்திரங்களின் இரண்டாம் நிலை பட்டியலைக் கொண்டுள்ளனர்.
இந்தப் பட்டியலானது, இலங்கை மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த மேலும் பல வழங்குநர்களை GIFT நகரத்தில் உள்ள வாய்ப்புகளை கண்டறிய ஊக்குவிக்கும் என்று நான் நம்புகின்றேன். சர்வதேச நிதி சேவைகள் மைய அதிகாரசபையின் பட்டியல் விதிமுறைகள், உலகளாவிய நிதி திரட்டலை ஆதரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையானது, வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி (BIMSTEC) வர்த்தக உச்சிமாநாட்டின் பரந்த நோக்குகைக்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த தொலைநோக்குப் பார்வையானது ‘உறுப்பு நாடுகளிடையே வலுவான வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் மூலம் அதிக பிராந்திய ஒத்துழைப்பை வளர்ப்பது’ ஆகும். பத்திரத்திலிருந்து கிடைக்கும் வருமானம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்குச் செலவிடப்படும். குறிப்பாக, அவை தரை மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட சூரிய ஒளிமின்னழுத்த மின்சார உற்பத்தித் திட்டங்களுக்கு செலவழிக்கப்படும். இந்தத் திட்டங்கள் இலங்கை பசுமை நிதி தொகுப்பு முறையியலுக்கு இணங்குகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் 70 வீத சக்தியை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவது என்ற நாட்டின் தேசிய இலக்கோடு அவை இணங்குகின்றன.
இந்தப் பத்திர வெளியீடானது, DFCC வங்கியின் நிலையான அபிவிருத்திக்கான நீண்டகால உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றது. இது ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள், குறிப்பாக நிலையான அபிவிருத்தி இலக்கு 7 (மலிவு மற்றும் தூய்மையான எரிசக்தி) மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கு 13 (காலநிலை நடவடிக்கை) ஆகியவற்றுக்கான வங்கியின் பங்களிப்பை மேம்படுத்துகின்றது. DFCC வங்கியின் பசுமைப் பத்திரங்கள் ஒரு கட்டமைப்பின் கீழ் வழங்கப்படுகின்றன. இந்தக் கட்டமைப்பானது, சர்வதேச மூலதனச் சந்தை சங்கத்தின் பசுமைப் பத்திரக் கோட்பாடுகளுடன் இணைக்கப்பட்டதாகும்.
இந்த முன்னோடி நடவடிக்கையின் மூலம், பிராந்திய காலநிலை மீள்தன்மை, பசுமை வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை அடைவதற்காக, உலகளாவிய மூலதனச் சந்தைகளை DFCC வங்கி தொடர்ந்து பயன்படுத்துகின்றது.
DFCC வங்கி பற்றிய அறிமுகம்
1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மற்றும் 1956ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட DFCC வங்கி பி.எல்.சி.யானது, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். தனது ஏழு தசாப்த கால புத்தாக்கம், மீள்தன்மை மற்றும் தேசிய அபிவிருத்திக்கான பங்களிப்பைக் குறிக்கும் வகையில், வங்கியானது 2025ஆம் ஆண்டு தனது 70 ஆண்டுகால சேவையை பெருமையுடன் கொண்டாடுகின்றது.
இலங்கையின் மத்திய வங்கியால் ஒழுங்குறுத்தப்பட்டு, Fitch Ratings தரப்படுத்தல் நிறுவனத்தால் ஏ தரத்திற்கு மதிப்பிடப்பட்ட இந்த வங்கி, திறைசேரி, முதலீடு மற்றும் வர்த்தக நிதித் தீர்வுகளுடன் சில்லறை, கூட்டுறவு மற்றும் SME வங்கிச் சேவைகள் என பரந்தளவான சேவைகளை வழங்குகின்றது.
வாடிக்கையாளர்களை நோக்கமாகக் கொண்ட மற்றும் நிலையான புத்தாக்க நடவடிக்கைகளுடன், DFCC வங்கி தடையற்ற மற்றும் பாதுகாப்பான வங்கி அனுபவங்களை வழங்குகிறது. இதில் DFCC MySpace போன்ற டிஜிட்டல் தளங்களும், 138 கிளைகளும், LankaPay வலையமைப்பு வழியாக 5,500இற்கும் மேற்பட்ட தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்தக்கூடிய வசதியும் உள்ளடங்கும். DFCC வங்கியானது, நிலையான நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய முயற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளதோடு, சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும் நீண்டகால பொருளாதார மீள்தன்மையை வளர்ப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனை (NSE IX) பற்றிய அறிமுகம்:
தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனை என்பது, 2017ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதியன்று GIFT நகரத்தில் அமைக்கப்பட்ட ஒரு சர்வதேச பல சொத்து (multi assets exchange) பரிமாற்றமாகும். அத்தோடு, இது சர்வதேச சேவைகள் நிலைய அதிகாரசபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும் ( www.ifsca.gov.in ). தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையானது, 99 வீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கினை கொண்டுள்ளது. இது GIFT சர்வதேச நிதிச் சேவைகள் நிலையத்தில் அதன் விரிவான தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையானது, பல்வேறு வகையான தயாரிப்புகளின் வகைகளை வழங்குகின்றது. இவற்றில் இந்திய ஒற்றைப் பங்கு வகையீடுகள், குறியீட்டு வகையீடுகள், நாணய வகையீடுகள், வைப்புத்தொகை ரசீதுகள் மற்றும் உலகளாவிய பங்குகள் ஆகியன உள்ளடங்கும். முதன்மை சந்தை தயாரிப்புகளின் விரிவான வரம்பை இந்த பரிமாற்றம் வழங்குகிறது. இதில் சாதாரண பங்குகள் (Equity Shares), SPAC, REITகள், InvITs, வைப்பு ரசீதுகள் (Depository Receipts), கடன் பத்திரங்கள் மற்றும் ESG கடன் பத்திரங்கள் பட்டியலிடுதல் ஆகியவை அடங்கும். அனைத்தும் சர்வதேச நிதிச் சேவைகள் மைய அதிகாரசபை (IFSCA) (பட்டியல்) விதிமுறைகள், 2024இன் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் வழங்கப்படுகின்றன. தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனை (NSE IX) மற்றும் GIFT NIFTY என்பன, ஒழுங்குமுறை 30.10 ஆகியவற்றின் கீழ் எதிர்கால பொருட்கள் வர்த்தக ஆணைக்குழுவிடம் (Commodity Futures Trading Commission) இருந்து 30 பகுதி விலக்கு பெற்றுள்ளன. பிரிவுகள் 5, 6, 15 அல்லது 17A (SEC சட்டம் 1934) இன் கீழ், SEC வகுப்பு நிவாரணத்தையும் பெற்றுள்ளன. இது அமெரிக்க வாடிக்கையாளர்கள் தேசிய பங்குச் சந்தை சர்வதேச பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள வகையீடு ஒப்பந்தங்களில் பங்கேற்க உதவுகின்றது.

