Jun 11, 2025 - 01:22 PM -
0
அண்மையில் நடைபெற்ற IFFSA விருதுகள் 2024 இல், அமானா வங்கி சிறந்த சாதனைகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தைச் சேர்ந்த வட்டிசாராத சிறந்த இஸ்லாமிய மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருதுகள் வழங்கலில் வங்கி நான்கு பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது.
அவற்றில், ஆண்டின் சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்துக்கான உயர் விருது (தங்கம்) மற்றும் ஆண்டின் சிறந்த இஸ்லாமிய வங்கி விருது (தங்கம்) போன்றன அடங்கியிருந்தன. இலங்கையில் மாத்திரமன்றி, தெற்காசிய பிராந்தியத்தில் இஸ்லாமிய நிதியியல் துறையில் அமானா வங்கி கொண்டுள்ள தலைமைத்துவ நிலையை இந்த விருதுகள் மேலும் உறுதி செய்துள்ளன. மேலே தெரிவிக்கப்பட்ட இரு விருதுகளுக்கு மேலதிகமாக, இஸ்லாமிய நிதியியல் பண்புக்கான தங்க விருது மற்றும் வங்கியின் நிலைபேறாண்மை செயற்பாடுகளை கௌரவித்து அறிமுக ESG விருதையும் பெற்றுக் கொண்டது.
வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் IFFSA விருதுகள், தெற்காசிய இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதித்துறையில் சிறப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், இந்தியா மற்றும் இதர தெற்காசிய நாடுகளின் நிறுவனங்கள் விருதுகளுக்காக விண்ணப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த கௌரவிப்பை பெற்றுக் கொண்டமை தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் நிலைபேறாண்மைக்கு எம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றமைக்கான கௌரவிப்பாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. அமானா வங்கியைச் சேர்ந்த நாம், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நிதிச் சேவைகளை வழங்க முயற்சிப்பது மாத்திரமன்றி, உள்ளடக்கம், ஒழுக்கமான வங்கியியல் மற்றும் சமூக பொறுப்புணர்வு ஆகிய எமது பிரதான பெறுமதிகளுடன் பொருந்தச் செய்யும் வகையில் அவற்றை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கிறோம். எமக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கும் மற்றும் எமது நோக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
கொழும்பு, ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற 9ஆவது தெற்காசிய இஸ்லாமிய நிதியியல் அமர்வுடன் (IFFSA) இந்த விருது வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தான், மலேசியா, மாலைதீவுகள், பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் அடங்கலாக பிராந்தியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பேச்சாளர்களை இந்த அமர்வு கொண்டிருந்தது. அமானா வங்கி மற்றும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மொஹமட் அஸ்மீர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். வளர்ந்து வரும் இஸ்லாமிய நிதியியல் முறைமைகள் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு அதன் பங்களிப்பு தொடர்பில் தமது கருத்துகளை இவர் பகிர்ந்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

