Jun 11, 2025 - 01:26 PM -
0
கொமர்ஷல் வங்கியானது கொழும்பில் அண்மையில் நடைபெற்ற விசா தலைமைத்துவ மாநாட்டின் போது இடம்பெற்ற விசா வணிக தீர்வுகள் சிறப்பு விருதுகள் 2025 இல்,சிறந்த எல்லை தாண்டிய சேவை - பெரிய மற்றும் நடுத்தர சந்தை விருதைப் பெற்றுள்ளது.
இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வானது, இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் சக்தியுடன் வர்த்தகங்களை செயல்படுத்தும் விசாவின் வணிக கொடுப்பனவு சுற்றுச்சூழல் முறைமையில் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கிறது.
உலகளாவிய ரீதியில் இலங்கையிலுள்ள நிறுவனங்கள் தடையின்றி மற்றும் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்ய உதவுவதில் வங்கியின் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், எல்லை தாண்டிய ரீதியில் சிறந்து விளங்குவதற்கான சிறப்பு விருதை கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது கடந்த ஒரு வருடமாக,தனது வர்த்தக நுகர்வோருக்கு நிகழ்நேர FX தெரிவுநிலை, மாறும் செலவுக் கட்டுப்பாடுகள் மற்றும் தானியங்கி நல்லிணக்கத்தை வழங்கும் மேம்படுத்தப்பட்ட வணிக அட்டை தீர்வுகளின் வெளியீட்டை துரிதப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் பெரிய மற்றும் நடுத்தர சந்தை வாடிக்கையாளர்களிடையே வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் விசா பரிவர்த்தனைகளில் இரட்டை இலக்க வளர்ச்சியைத் தூண்டியுள்ள அதே வேளை பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவத்தில் வங்கியின் கடுமையான தரநிலைகளை வலுப்படுத்துகின்றன.
இந்த விருதை ஏற்றுக்கொண்ட கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கி மற்றும் சில்லறை வங்கிச்சேவைகள் தயாரிப்புகள் பிரிவு உதவி பொது முகாமையாளரான திரு. கபில லியனகே கூறியதாவது: இந்த அங்கீகாரமானது இலங்கையின் பெரிய மற்றும் நடுத்தர சந்தை வாடிக்கையாளர்களை அதிநவீன, எல்லை தாண்டிய கட்டணத் திறன்களுடன் மேம்படுத்துவதற்கான எமது உத்தியின் வெற்றியை வெளிப்படுத்துவதாகவுள்ளது. விசாவின் உலகளாவிய வலையமைப்பை எமது சொந்த வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்போடு இணைப்பதன் மூலம், வர்த்தக செயற்பாடுகள் எல்லைகளைத் தாண்டிய ரீதியில் நம்பிக்கையுடன் செயல்பட உதவுவதுடன் அவர்களின் வளர்ச்சிக்கும், பிரதானமாக, நாட்டின் பொருளாதார அபிலாஷைகளைக்கும் எமது ஆதரவினை வழங்குகிறோம். இந்த கௌரவத்திற்காக விசாவிற்கும், எமது வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
விசாவின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான வதிவிட முகாமையாளர் திருமதி அவந்தி கொலம்பகே விருது பெற்ற வங்கியை பாராட்டி பேசுகையில், கொமர்ஷல் வங்கியின் புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தலுக்கான அர்ப்பணிப்பானது, விசா வணிக தீர்வுகள் சிறப்பு விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். எல்லை தாண்டிய முக்கியத்துவத்தில் அவர்களின் வெற்றியானது, மூலோபாய பங்குடைமைகளும் தொழில்நுட்பமும் இலங்கை வர்த்தகங்களுக்கு புதிய வாய்ப்புகளை எவ்வாறு வழங்க முடியும் என்பதை நிரூபிக்கிறது. நாட்டில் உள்ள பெரிய மற்றும் சிறிய வார்த்தகங்களுக்கான கட்டணங்களை டிஜிட்டல் மயமாக்கும் எமது பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் கொமர்ஷல் வங்கியுடனான இந்த பங்குடைமையை தொடர்ந்து வலுப்படுத்துவதில் விசா மகிழ்ச்சியடைகிறது என்று குறிப்பிட்டார்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

