Jun 12, 2025 - 11:19 AM -
0
சூழல் நிலைபேற்றியல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கெதிரான செயற்பாடு குறித்த தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, Rainforest Protectors Sri Lanka ன் ஒத்துழைப்புடன் தற்போது முன்னெடுத்து வருகின்ற மழைக்காடு மீள்வளர்ப்புச் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. பலாங்கொடையிலுள்ள ரஜவக்க பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் இம்முயற்சி இடம்பெறுவதுடன், சூழலைப் பாதுகாத்தல், பல்லுயிரினப் பெருக்கம் மற்றும் நீண்ட கால சூழல் நெகிழ்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிறுவனத்தின் பரந்த இலக்கில் முக்கியமானதொரு படியாக இது காணப்படுகின்றது.
இதன் இரண்டாம் கட்டப் பணிகள் 2025 மே 16 அன்று இடம்பெற்றதுடன், ஹட்ச் ஊழியர்கள் மற்றும் Rainforest Protectors Sri Lanka உறுப்பினர்களின் தீவிரமான ஈடுபாட்டுடன் முன்னெடுக்கப்பட்டது. பாழடைந்த வனப் பிரதேசங்களை புனரமைத்து, இயற்கை உயிரினங்களை மீளவும் பெருக்கச் செய்யும் நோக்குடன் மர நடுகை மற்றும் ஏனைய பாதுகாப்புப் பணிகளில் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டனர். ஆண்டு முழுவதும் பல்வேறு கட்டங்களாக முன்னெடுக்கப்படும் வகையில் இம்முயற்சி திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிலைபேற்றியல் கொண்ட சூழலியல் விளைவு மற்றும் வெளிப்படையான மீள்காடு வளர்ப்பு மேம்பாடு ஆகியவை உறுதி செய்யப்படுகின்றன.
தேசிய மட்டத்திலான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய சூழல் இலக்குகளுடன் தனது நிலைபேற்றியல் நிகழ்ச்சிநிரலை ஒன்றிக்கச் செய்துள்ள ஹட்ச், சூழலைப் பாதுகாப்பதில் வர்த்தக நிறுவனங்கள் எவ்வாறு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பை வழங்க முடியும் என்பதைக் காண்பித்து வருகின்றது. Rainforest Protectors Sri Lanka உடன் இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ள கூட்டாண்மையானது காலநிலை மாற்றத்திற்கு எதிரான நெகிழ்திறனுக்கான நேரடி தீர்வுகளை அமுல்படுத்துவதில் விழிப்புணர்வை ஊக்குவித்தல், சமூக ஈடுபாட்டை ஊக்குவித்தல் ஆகியவற்றில் தமக்கிடையில் பகிர்ந்து கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் மங்கள பண்டார அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ரஜவக்க பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் எமது தொடர்ச்சியான ஈடுபாடானது வழக்கமான நிறுவன சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளுக்கும் அப்பாற்பட்டது.
பொறுப்புணர்வுள்ள வணிகச் செயற்பாடுகள் சூழல் மீதான அக்கறையையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதன் மீது எமது நம்பிக்கையை இது பிரதிபலிக்கின்றது. CK Hutchison Group குழுமத்தின் அங்கம் என்ற வகையில், 2030 ம் ஆண்டளவில் நிகர காபன் உமிழ்வை பூச்சியமாக்கும் இலக்கு அடங்கலாக, குழுமத்தின் உலகளாவிய ஆணையின் கீழான அதன் நிலைபேற்றியல் முயற்சிகளுடன் ஹட்ச் ஒன்றியுள்ளது. அரசாங்கத்தின் வழிநடாத்தலில் நிகர பூச்சிய இலக்குகளை அடையப்பெற்று, இன்னும் கூடுதலான அளவில் நிலைபேணத்தக்க எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் இலங்கையின் தேசிய இலக்கிற்கான எமது ஆதரவையும் இம்முயற்சி மீள உறுதிப்படுத்துகின்றது,” என்று குறிப்பிட்டார்.
Rainforest Protectors Sri Lanka ன் அமைப்பாளரான ஜயந்த விஜேசிங்க அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “ஹட்ச் போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது அதன் பலாபலனை பன்மடங்காக்க எமக்கு இடமளிக்கின்றது. இச்செயற்திட்டத்தின் தொடர்ச்சியானது நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு எவ்வாறு பாதுகாக்கும் முயற்சிகளின் பலன்களை வலுப்படுத்துகின்றது என்பதைக் காண்பிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான, பல கட்டங்கள் கொண்ட முயற்சியாக, தனது ஈடுபாட்டை தீவிரமாக்கி, பரந்தளவில் தொடர்புபட்ட தரப்பினரும் இதில் பங்கெடுப்பதற்கு ஊக்குவிப்பதே ஹட்ச் நிறுவனத்தின் நோக்கம். நிலைபேணத்தக்க, நிறுவனங்களின் முன்னின்று மேற்கொள்கின்ற சூழல் செயற்பாடுகளுக்கு முன்னுதாரணமாக இம்முயற்சி காணப்படுவதுடன், இலங்கையின் இயற்கை சூழல் கட்டமைப்பைப் பாதுகாப்பதில் அரச- தனியார் கூட்டாண்மைகளின் முக்கியமான வகிபாகத்தைக் காண்பிக்கின்றது.

