Jun 12, 2025 - 03:43 PM -
0
இந்தியாவின் ஹைதராபாத்தில் பிரபல பாடகி மங்கிலி பிறந்தநாள் பார்ட்டியில் வெளிநாட்டு மதுவகைகள் மற்றும் கஞ்சா பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. அதிரடியாக சோதனை நடத்திய பொலிஸார் பாடகி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனது கட்டற்ற குரல் வளத்தால் தெலுங்கு சினிமா மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் பாடகி மங்கிலி. புஷ்பா, ஜவான் உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடிய பாடல்கள் பான் இந்தியா அளவில் கொண்டாடப்பட்டது. இவரது ஊ அண்டாவா மாவா கன்னட வெர்ஷன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள மங்கிலி தனது 31 ஆவது பிறந்த நாளை ஜூன் 10 ஆம் திகதி கொண்டாடினார்.
இதற்காக தனது நண்பர்கள் உள்ளிட்ட பலருக்கும் பார்ட்டி கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார் மங்கிலி. அதற்காக ஹைதராபாத் சேவல்லா பகுதியில் அமைந்துள்ள பிரபலமான திரிபுரா ரிசார்ட்டை புக் செய்துள்ளார். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என காதைக் கிழிக்கும் சப்தத்துடன் டிஜே கச்சேரி களை கட்டியது. இதற்கு நடுவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வெளிநாட்டு மதுவகைகள் தாராளமாக வழங்கப்பட்டன.
அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, பார்ட்டியில் பயன்படுத்துவதற்கென்று வரவழைக்கப்பட்ட உயர் ரக கஞ்சா பொட்டலங்கள், பார்ட்டியில் தாராளமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதையில் அவர்கள் போட்ட ஆட்டம் அருகில் உள்ள சேவல்லா காவல் நிலையம் வரை தகவல் சென்று விட்டது. தகவலின்பேரில் ஒரு குழுவாக சென்ற பொலிஸார் ரிசார்ட்டை சுத்து போட்டு சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த பாடகி மங்கிலி பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் பொலிஸார் எங்களுடைய கடமையைத் தான் நாங்கள் செய்கிறோம் அதைத் தடுப்பதற்கு நீங்கள் யார்? என கேள்வி எழுப்பியவுடன் அவர் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய அதிரடி சோதனையில் பொலிஸ் அனுமதி இல்லாமல் டிஜே கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மேலும் அனுமதி இல்லாமல் வெளிநாட்டு மதுவகைகளை விருந்தினர்களுக்கு சப்ளை செய்ததுடன், சிலர் கஞ்சா போதையில் பொலிஸார் முன்னிலையிலேயே குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்ததையும் கவனித்த பொலிஸார் அனைவரையும் பிடித்து மருத்துவ சோதனைக்கு அழைத்துச் சென்றனர். டிஜே கச்சேரிக்கான உபகரணங்களை கைப்பற்றியதுடன், வெளிநாட்டு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து பாடகி மங்கிலி மீது அனுமதியில்லாமல் டிஜே கச்சேரி ஏற்பாடு செய்தது, அனுமதி இல்லாமல் வெளிநாட்டு மது வகைகளை விருந்தினர்களுக்கு விநியோகம் செய்தது மற்றும் கஞ்சா பயன்படுத்த அனுமதி அளித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்கிலி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் பலருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.