Jun 12, 2025 - 09:34 PM -
0
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடற்படையும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மீன்பிடி அமைச்சர் உறுதியளித்துள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (12) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
நேற்று (11) மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மீன்பிடி அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினோம். இந்தச் சந்திப்பு, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் தமிழக மீனவர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய வருகை மற்றும் இதுதொடர்பாக அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவும், வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சந்திப்பில் மீன்பிடி அமைச்சின் செயலாளரும் கலந்துகொண்டார்.
தமிழக மீனவர்களின் 60 நாள் மீன்பிடித் தடைக் காலம் இம்மாதம் 15 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர், அவர்களின் எல்லை தாண்டிய வருகை எமது கடல் பகுதியில் நிச்சயமாக இடம்பெற வாய்ப்புள்ளது.
இதனை அரசும், மீன்பிடி அமைச்சும் எவ்வாறு தடுக்கத் திட்டமிட்டுள்ளன என்பது குறித்தும், வடபகுதி மீனவர்கள் இதனை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளனர் என்பது குறித்தும் நாங்கள் ஆழமாக கலந்துரையாடினோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையையும், சட்டவிரோத மீன்பிடித்தலையும் தடுப்பதற்காக நாங்கள் நீண்ட காலமாகப் போராடி வருகிறோம். பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். தமிழக மற்றும் இந்திய மட்டங்களில் இதுகுறித்து பேசியுள்ளோம்.
பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளோம். வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் 2004 ஆம் ஆண்டு முதல் இவ்விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. நெப்சோ (NEPSO) நிறுவனமும் தன்னால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைத் தடுப்பதற்கான திட்டம் குறித்து மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடினோம். இவ்விடயம் தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகையைத் தடுக்க இலங்கை அரசும், மீன்பிடி அமைச்சும் தீவிரமாக செயல்படுகின்றன.
கடற்படையும் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடல் எல்லையை கடற்படை மூலம் தீவிரமாகக் கண்காணிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அத்துமீறி வரும் இந்திய மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். வடபகுதி மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அரசு தனது செயல்பாடுகளில் உறுதியாக உள்ளது என்று மீன்பிடி அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார்.
அரசாங்கம் அத்துமீறிய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது என்பதை நாங்கள் அறிகிறோம். இருப்பினும், கடற்படை மற்றும் அரசு இவ்விடயத்தில் கவனக்குறைவாக இருந்தால், எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மீனவர்களிடையே உள்ளது என்பதை மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
--