Jun 12, 2025 - 10:14 PM -
0
இலங்கை விவசாய அமைச்சு மேற்கொண்ட தேசிய விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, அமைச்சு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் (கால்நடை வளங்கள்) டாக்டர் பாலிகா பெர்ணான்டோ, கழிவு முகாமைத்துவம் முறையாக மேற்கொள்ளப்படாததால் விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி, செயல்படுத்தப்படவுள்ள பரிந்துரைகள்:
* முறையான கழிவு முகாமைத்துவம்
* கருத்தடை வேலைத்திட்டங்கள்
* வனவிலங்கு முகாமைத்துவத்திற்கு தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்
* விலங்கு எண்ணிக்கை அதிகமாக உள்ள பகுதிகளில் சமூக பயிர் பாதுகாப்பு குழுக்கள்
இந்த தேசிய விலங்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவசாய அமைச்சினால் கடந்த மார்ச் 15 அன்று தொடங்கப்பட்டு, அதன் அறிக்கையின் தகவல்கள் இன்று (12) வெளியிடப்பட்டன.
இந்த அறிக்கையின்படி, இலங்கை முழுவதும் உள்ள குரங்குகள், மந்திகள், மயில்கள் மற்றும் மர அணில்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே முப்பது இலட்சத்திற்கு மேல் ஆகும்.
இந்த கணக்கெடுப்பு பிரித்தானியாவில் விலங்கு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பயன்படுத்தப்படும் ‘பொயின்ட் கவுன்டிங்’ (Point Counting) முறையை அடிப்படையாகக் கொண்டது என விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வனவிலங்கு பாதிப்புகளை குறைப்பதற்கான குழு தெரிவித்தது.
கணக்கெடுப்பின்படி, அதிகபட்ச குரங்குகள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இது 634,668 ஆகும்.
அதேபோல், 160,315 என்ற அதிகபட்ச மந்திகள் அனுராதபுரத்தில் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச மர அணில்கள் மற்றும் மயில்கள் குருணாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது, இவை முறையே 546,715 மற்றும் 621,517 ஆக கணக்கிடப்பட்டுள்ளன.

