வடக்கு
தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்னாள் போராட்டம்

Jun 13, 2025 - 01:45 PM -

0

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு முன்னாள் போராட்டம்

தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சையை குழப்பம் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இது குறித்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில், 

இந்த வைத்தியசாலையானது வடக்கு மாகாணத்தில் உள்ள விசேடமான ஒரே ஒரு புற்றுநோய் வைத்தியசாலை ஆகும். 

வடக்கிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். தெற்கில் இருந்து கூட பல நோயாளிகள் இந்த வைத்தியசாலைக்கு அன்றாடம் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 

கடந்த காலத்தில் 11 சதவீதமான மக்கள் வெளி மாவட்டத்திலிருந்து இங்கே வருகை தந்து சிகிச்சையை பெற்று சென்றனர். 

இதிலிருந்து நமது வைத்தியசாலை எவ்வாறு சிறப்பான சேவையை வழங்குகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். 

இதனை சிதைக்கும் செயற்பாடு கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. தனிப்பட்ட இலாபத்தை கருத்தில் கொள்ளாத, தன்னலமற்ற வைத்தியர்கள், நிர்வாகத்தினரால் அடக்குமுறை, பழிவாங்கல் வாங்கல் மற்றும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 

பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பி சிறந்த வைத்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முனைகின்றனர். 

இதனால் இனிமேல் மக்கள் தனியார் அல்லது மஹரகம வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கி நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தப் போராட்டமானது தனி மனிதனுக்கானது அல்ல ஏழை மக்களுக்கானது. 

ஏழை மக்கள் இலவச சிகிச்சை பெறுகின்ற உரிமையை பாதுகாக்க வேண்டும். தரமான, இலவசமான சிகிச்சையை பெறுவதை மறுக்கும் சட்டவிரோத செயற்பாடுகளிலிருந்து பாதுகாத்து, நோயாளிகளின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 

இதன்போது போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி, கோசமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் வைத்தியர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்புனர் செல்வராசா கஜேந்திரன், சமூக மட்ட அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

அத்துடன் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பான மகஜர், ஜனாதிபதிக்கு வழங்குவதற்காக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடம் கையளிக்கப்பட்டது.

 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05