Jun 13, 2025 - 05:50 PM -
0
சோனா காம்ஸ்டார் நிறுவனத்தின் தலைவரும், பிரபல பொலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான தொழிலதிபர் சஞ்சய் கபூர் நேற்று மாலை (53) காலமானார்.
போலோ விளையாடும் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சஞ்சய் கபூரும், கரிஷ்மா கபூரும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் 2016ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கரிஷ்மாவுடனான விவாகரத்தை தொடர்ந்து, 2017-ல் பிரியா சச்தேவ் என்பவரை சஞ்சய் மறுமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தொழிலதிபரான சஞ்சய் கபூர் போலோ விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் தேசிய அளவில் சிறந்த போலோ வீரராக உள்ளார். அவர் லண்டனில் போலோ விளையாடுவதற்காக சென்றிருந்தார்.
அங்கு அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே போட்டியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து போட்டியில் இருந்து வெளியில் வந்தபோது அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.
உடனே அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.