செய்திகள்
வாழைச்சேனையில் இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்

Jun 14, 2025 - 06:13 PM -

0

வாழைச்சேனையில் இ.போ.ச, தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி சந்தியில் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் பயணி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் நடத்துனர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். 

அக்கரைப்பற்றில் இருந்து வவுனியாவுக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்தும் அக்கரைப்பற்றில் இருந்து புத்தளத்துக்கான போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும் சம்பவதினமான இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பித்தன.

இதன் போது பயணிகளை ஏற்றும் நடவடிக்கையில் இரு பேருந்துகளுக்கும் முன்னுக்கு பின் போட்டி போட்டுக் கொண்டு பயணித்துள்ளதுடன் இதனால் இரு பேருந்துகளின் நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே பெரும் முறுகல் ஏற்பட்டது. 

இதனையடுத்து பயணிகள் காலை உணவு உண்பதற்காக 8.45 மணியளவில் வாழைச்சேனை நாவலடி சந்தியிலுள்ள உணவகத்தில் இரு பேருந்துகளும் முன்னுக்கு பின்னர் நிறுத்திய நிலையில், நடத்துனர்கள் சாரதிகளுக்குள்ளே வாய்த்தர்கம் முற்றி மோதலில் ஈடுபட்டனர். 

இதன்போது இதனை தடுக்க சென்ற பயணி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அவர் காயமடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இச்சம்பவத்தையடுத்து தனியார் பேருந்தின் நடத்துனர் அவரது உதவியாளர் உட்பட இருவரை கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05