வடக்கு
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ பரவல்

Jun 16, 2025 - 12:59 PM -

0

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தீ பரவல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் இன்று (16) காலை தீ  பரவல் இடம்பெற்றது.

 

இந்த தீ பரவலானது முதலில் பிரபல உணவகம் ஒன்றில் ஆரம்பித்து அருகில் உள்ள பாதணிக் கடைக்கு பரவி அதிக தீ விபத்தாக மாறியது.

 

இதில் குறித்த உணவகம் மற்றும் பாதணிக் கடை முற்றுமுழுதாக எரிந்து அழிவடைந்துள்ளதோடு அருகில் உள்ள மேலும் இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

 

இந்த தீ பரவல் ஏற்பட்டதும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, கரைதுறைப்பற்று பிரதேச சபை, கடற்படையினர் , இராணுவத்தினர் விரைந்து நீர்த்தாங்கிகள் மூலம்  தீ பரவலை காலை 9.30 மணியளவில் முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு படைப்பிரிவு இல்லாமையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் உதவியை மாவட்ட அனர்த்த  முகாமைத்துவப் பிரிவு நாடியிருந்தது. இருப்பினும் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதனால் கிளிநொச்சி மாவட்ட தீயணைப்புப் படைப்பிரிவின் உதவி கோரிக்கை இடைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தீயணைப்பு படைப்பிரிவின் அவசியம் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச்சென்ற வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

 

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப்பிரிவொன்று இல்லாமையினாலேயே கூடுதல் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவொன்றை ஏற்படுத்துவதுதொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05