Jun 17, 2025 - 11:41 AM -
0
இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்க இன்று அதிகாலை செவ்வாய்க்கு ஆடுதலுடன் நிறைவுபெற்றது.
பல நூற்றாண்டு பழமையான குறித்த ஆலயமானது கிழக்கிலங்கையின் தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு முறைகளைக்கொண்டதாக ஒரு நாள் திருச்சடங்காகவும் நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பண்டைய கால முறைகளுக்கு அமைவாக பறவைக்காவடிகள் மற்றும் காவடிகள் சகிதம் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வர பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து அம்மன் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலயத்தினை அம்மன் ஊர்வலம் வந்தடைந்ததும் ஆலய திருச்சடங்கின் திருக்கதவு திறக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.
நள்ளிரவு 12 மணி அளவில் கடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான பூரண கும்பம் நிறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சிறுமியர்கள் ஆரத்தியெடுக்கும்போது பூரணகும்பம் நிறுத்தப்படுவதுடன் இதன்போது கும்பமானது மேலெழுந்து கீழ்நோக்கிவரும் நிகழ்வு வருடாந்தம் பண்டைய காலம் தொடக்கம் நடைபெற்று வருகின்றது.
அதனை தொடர்ந்து இன்று அதிகாலை நடைபெற்ற செவ்வாய்க்கு ஆடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு இனிது நிறைவு பெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் ஒருநாள் திருச்சடங்கில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
--