செய்திகள்
இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீடு

Jun 17, 2025 - 03:10 PM -

0

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீடு

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. 

உலக உணவுப் பாதுகாப்புக் குறியீடு (GFSI) போன்ற குறியீடுகள், இலங்கையின் முழுமையான உணவுப் பாதுகாப்பு நிலைமையை சரியாக பிரதிபலிப்பதில்லை என்பதோடு, கிடைக்கக்கூடிய தரவுகள் போதுமானதாக இல்லை அல்லது துல்லியமாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் உரிய கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பது சிரமமாக உள்ளது. 

எனவே, அடுத்த 05 ஆண்டுகளில் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை அடையாளம் கண்டு சரியான கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பதற்காக இந்தப் புதிய உணவுப் பாதுகாப்புக் குறியீடு உருவாக்கப்படவுள்ளது. 

அதன் ஆரம்ப கட்டமாக, “இலங்கைக்கு பொருத்தமான உணவுப் பாதுகாப்புக் குறிகாட்டியை இனங்காணுதல் மற்றும் மூலோபாயத் திட்டமொன்றை தயாரித்தல்” தொடர்பான செயலமர்வு இன்று (17) முற்பகல் கொழும்பு சிட்டி சென்டரில் நடைபெற்றது. 

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றுடன் இணைந்து உணவுப் பாதுகாப்பு நிபுணர் குழு, இந்த செயலமர்வை ஏற்பாடு செய்திருந்தது. 

செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில குணரத்ன, "இலங்கைக்கென தனித்துவமான மிகச்சரியான குறிகாட்டி உருவாக்குவது இந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு படியாகும்" என்று தெரிவித்தார். 

உணவுப் பாதுகாப்பின் அடிப்படை கூறுகளான, இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடிய தன்மை, அணுகல், பயன்பாடு மற்றும் நிலைத்தல் தன்மை ஆகிய அம்சங்கள் ஊடாக 

உணவுப் பாதுகாப்பின் நோக்குநிலை பற்றிய புரிதலைப் பெறுவதில் இந்த செயலமர்வு கவனம் செலுத்தியது. மேலும், தேசிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிப்பதே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05