Jun 18, 2025 - 09:41 AM -
0
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) அதிகாலையில் இடம்பெற்றதுடன் குறித்த வாகன சாரதி தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் மண்டூர் சின்னவத்தையைச் சேர்ந்த 25 வயதுடைய செல்வம் சாந்தன் செல்லையா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
செங்கலடி, பதுளை வீதியிலுள்ள கரடியனாறு, தும்பாஞ்சோலை பகுதியிலுள்ள வீதிக்கு அருகிலுள்ள வேளாண்மை காவலுக்காக குறித்த இளைஞன் உட்பட இருவர் கடந்த 16 ஆம் திகதி இரவு சென்று இங்கு வீதியின் ஓரத்தில் உறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீதி ஓரத்தில் உறங்கி கொண்டு இருந்த இளைஞன் மீது வீதியில் சென்ற வாகனம் ஏறிச் சென்றதையடுத்து விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலிலே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இளைஞனுடன் அருகில் உறங்கியவர் குறித்த விபத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் அவர் கண்விழித்த போது இளைஞனுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில் இருந்துள்ளதுடன் மதுபானம் அருந்திவிட்டு வீதியில் உறங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது தலையில் வாகனத்தின் டயர் எறியதால் உயிரிழந்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் கண்டறிந்துள்ளதையடுத்து இளைஞன் மீது வாகனத்தை ஏற்றிய சாரதியையும், வாகனத்தையும் கண்டு பிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--