செய்திகள்
ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து வௌியான தவறான செய்தி

Jun 18, 2025 - 08:04 PM -

0

ஜனாதிபதியின் ஜெர்மனி பயணம் குறித்து வௌியான தவறான செய்தி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய ஜெர்மனி விஜயத்தின் போது, பொதுமக்களைத் தூண்டும் நோக்கில் இணையத்தில் தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (18) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் ஜி. சுபாஷ் சமிந்த ரோஷன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

ஜனாதிபதி தனது ஜெர்மனி விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவரை சந்திப்பார் என்ற தகவல் கசிந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில ஊடக சந்திப்பொன்றில் வைத்து தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இந்த விவாதம் பல்வேறு ஊடகங்கள் மற்றும் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தையும் சங்கடப்படுத்தும் நோக்கத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. 

அதன்படி, சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ
01
02
03
04
05