Jun 19, 2025 - 09:56 AM -
0
இந்தோனேசியாவில் லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். சர்வதேச விமானங்கள் இரத்தாகின.
பசுபிக் நெருப்பு வளையம் என்பது உலகின் மிகப்பெரிய பெருங்கடலான பசுபிக் பெருங்கடலை சுற்றி கடலுக்கு அடியிலும், நிலத்திலும் இருக்கும் நிலத்தட்டுகளில் அமைந்திருக்கும் எரிமலைகளில் வளைவான தொடராகும்.
இந்த பகுதியில் அமைந்திருக்கும் எரிமலைகள் அவ்வப்போது வெடிப்பதால் சுனாமி மற்றும் பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவிலும் அதிக அளவிலான எரிமலைகள் உள்ளன.
ஆங்காங்கே சிதறி கிடக்கும் தீவு நாடான இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுக்கூட்டத்தில் பாலி தீவு அமைந்துள்ளது. கண்ணை கொள்ளையடிக்கும் கடற்கரைகள், பசுமையான மலைகள், வாயை பிளக்க வைக்கும் பள்ளத்தாக்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவில் 1,500 மீற்றர் உயர லிவோட்பி என்ற எரிமலை உள்ளது.
உள்ளூர் மக்களால் லகி-லகி என்று அழைக்கப்படும் இந்த அதிபயங்கர எரிமலை அவ்வப்போது வெடித்து சிதறி வருகிறது. இது அங்குள்ள உள்ளூர்வாசிகளை மட்டுமின்றி சுற்றுலாவுக்காக வரும் வெளிநாட்டு பயணிகளை கலங்க செய்து வருகிறது.
இந்தநிலையில் நேற்றும் இந்த லகி-லகி எரிமலை வெடித்து சிதறியது. அதிகாலையில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய எரிமலை காரணமாக வானில் சுமார் 5 ஆயிரம் மீற்றர் உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. மேலும் சுமார் 10,000 மீற்றர் உயரத்திற்கு புகை மண்டலமாக மேலழுப்பி வானில் கலந்தது. இது அங்கிருந்தவர்களுக்கு சிவப்பு நிற குடை காளான்போல காட்சியளித்தது.
இந்த புகை மண்டலம் காரணமாக இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இயக்கப்பட இருந்த 20இற்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்தாகின. மேலும் பாலி தீவுக்கு விமான சேவை தடைப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றி வசித்து வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.