Jun 19, 2025 - 11:41 AM -
0
கொமர்ஷல் வங்கியானது கவர்ச்சிகரமான லீசிங் வசதிகள் மூலம் வாகனத் தொகுதிகளை மேம்படுத்துவதற்காக இந்திரா டிரேடர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டுடன் மூலோபாய பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக இரு நிறுவனங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்ட நிலையில் கூட்டு ஊக்குவிப்பு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டபோது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் கொமர்ஷல் வங்கி மூலம் இந்திரா டிரேடர்ஸிடமிருந்து பதிவு செய்யப்படாத மற்றும் ஏற்கனவே சொந்தமான வாகனங்களை லீசிங் வசதியில் பெறும் போது பல்வேறு சிறப்பு சலுகைகளை அனுபவிப்பார்கள். இந்த ஒப்பந்தத்திற்கு அமைய வங்கியானது வாடிக்கையாளர்கள் தமது வருமான முறைகளுக்கு ஏற்ப தமது மீளச்செலுத்துகைகளை வழங்கும் வகையில் போட்டித்தன்மை வாய்ந்த வட்டி வீதங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் வசதிகளை வழங்கவுள்ளது. மேலதிகமாக, லீசிங் வசதிகளுக்கான ஆவணக் கட்டணங்களில் 50% தள்ளுபடி வழங்கப்படும். கொமர்ஷல் வங்கியின் விரிவான நாடளாவிய கிளை வலையமைப்பு மூலம் லீசிங் சேவைகள் அணுகக்கூடியதாக இருக்கும், மேலும் பிரசார காலத்தில் அனைத்து இந்திரா டிரேடர்ஸ் விற்பனை நிலையங்களிலும் ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்திரா டிரேடர்ஸ் ஆனது, வாடிக்கையாளர்களுக்கு எஞ்சின் மற்றும் கியர்பொக்ஸுக்கு இரண்டு வருட உத்தரவாதத்தையும், பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான ஹைப்ரிட் பேட்டரிக்கு மூன்று வருட உத்தரவாதத்தையும் வழங்குவதன் மூலம் இந்த நன்மைகளை நிறைவு செய்யும். கொள்வனவாளர்களுக்கு இந்திரா மோட்டார் ஸ்பேர்ஸிலிருந்து உதிரி பாகங்களுக்கு 10% விலைக்கழிவும், முதல் ஆண்டில் இந்திரா சேவை பிரிவில் இருந்து தொழிலாளர் கட்டணத்தில் 10% விலைக்கழிவும் வழங்கப்படும். இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையானது ஜூன் 6, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை இடம்பெறவுள்ளதுடன் மேலும் இந்திரா டிரேடர்ஸிடமிருந்து கிடைக்கும் முழு அளவிலான வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

