Jun 20, 2025 - 10:43 AM -
0
நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். ஏற்கனவே மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி, முதன்முறையாக நடிகர் சூர்யா உடன் இணைந்த படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்து உள்ளார்.
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். ஏற்கனவே மெளனம் பேசியதே, ஆறு போன்ற படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர்கள் பல வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளனர்.
சூர்யா 45 திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளார். சூர்யா 45 படத்தில் நடிகர் சூர்யா உடன் ஆர்.ஜே.பாலாஜி, சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு, நட்டி நட்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சூர்யா 45 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், சூர்யா 45 படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்தநாள் என்பதால், அதையொட்டி சூர்யா 45 படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இப்படத்திற்கு ‘கருப்பு’ என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதற்காக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் நடிகர் சூர்யா கையில் அரிவாளோடு நிற்பது போன்ற புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது. இதன்மூலம் பக்கா ஆக்ஷன் படமாக இது உருவாகி வருவதாக தெரிகிறது.
இந்த போஸ்டரை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த போஸ்டரில் படத்தின் ரிலீஸ் பற்றி எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு குறிப்பிடவில்லை. அதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. அடுத்த மாதம் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு கருப்பு படத்தின் டீசர் அல்லது பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.