விளையாட்டு
காலி டெஸ்ட் - சமநிலையில் நிறைவு

Jun 21, 2025 - 05:26 PM -

0

காலி டெஸ்ட் - சமநிலையில் நிறைவு

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

இன்றைய ஐந்தாம் நாளில் 296 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 484 ஓட்டங்களை பெற்றது.


பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்ஃபிகர் ரஹீம் 163 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷான்டோ 148 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்ணான்டோ, மிலான் ரத்னாயக்க, தரிந்து ரத்னாயக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியுள்ளனர். 

பின்னர் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 187 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ஓட்டங்களையும், தினேஸ் சந்திமால் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.  

பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் நயீம் ஹசன் 5 விக்கெட்டுக்களையும், ஹசன் மஹ்மூட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.  

இதனையடுத்து, தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, அணித்தலைவர் ஷான்டோவின் அபாரமான சதத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. 

பங்களாதேஷ் அணி சார்பாக அணித்தலைவர் ஷான்டோ 125 ஓட்டங்களையும் ஷட்மன் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

அதற்கமைய, பங்களாதேஷ் அணி இலங்கை அணிக்கு 296 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. 

இந்த டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் எஞ்சலோ மெத்யூஸ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார். 

எஞ்சலோ மெத்யூஸ் 119 டெஸ்ட் போட்டிகளில் 211 இன்னிஸ்களில் விளையாடி 8,214 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 16 சதங்களும் 45 அரைசதங்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05