Jun 22, 2025 - 04:21 PM -
0
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, நாளை திங்கட்கிழமை ரஷ்ய ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் தொடர்பாக நேரலையாக கருத்து வௌியிட்ட ஈரான் வெளியுறவு அமைச்சர், இன்று மாஸ்கோவிற்கு விமானம் மூலம் சென்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"ரஷ்யா ஈரானின் நண்பன். நாங்கள் எப்போதும் எங்கள் நிலைப்பாடுகளை ஒருவருக்கொருவர் விவாதித்து ஒருங்கிணைக்கிறோம். நாளை நான் ரஷ்ய ஜனாதிபதியுடன் தீவிர ஆலோசனைகளை நடத்துவேன், நாங்கள் தொடர்ந்து ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றுவோம்" என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இதேவேளை, இஸ்தான்புல்லில் நடைபெற்ற இந்த விசேட நேரலையில், ஈரான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அணு ஆயுதங்களைத் தேடுவதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டி ஈரான் மீது ஏன் தாக்குதல் நடத்த வேண்டும் என்று தனக்குப் புரியவில்லை என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்குப் பிறகு, ராஜதந்திரம் என்பது ஒரு விருப்பமல்ல என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார். "டிரம்ப் அமெரிக்க வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்தார்" இன்றைய அமெரிக்க தாக்குதல்கள் டிரம்ப் ஈரானுக்கு மட்டுமல்ல, அவரது சொந்த ஆதரவாளர்களுக்கும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய நிலைமை குறித்து ஈரான் ஜனாதிபதியிடம் பேசினேன். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், பதற்றத்தை உடனடியாகக் குறைப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.