செய்திகள்
மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரிதான் மகஸின் சிறைச்சாலை

Jun 22, 2025 - 04:45 PM -

0

மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரிதான் மகஸின் சிறைச்சாலை

ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறிவருகின்றது என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கிளிநொச்சி நெலும் பியசவில் இன்று (22) நடைபெற்றது. 

2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், ஒரு மாவட்டத்தில் சிறந்த பெபேறுகளைப்பெற்ற 60 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நிதிப் புலமைப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 287 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா, க.இளங்குமரன், ம.ஜெகதீஸ்வரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு, 

சாதாரண மக்களுக்கான ஜனாதிபதி நிதியத்தையும் பெரும் புள்ளிகளே கடந்த காலத்தில் பெற்றுள்ளனர். தற்போதுதான் அதனை சாதாரண மக்களுக்கு - தேவையுள்ள மக்களுக்கு உரிய வகையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். 

கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொருவராக சிறைச்சாலைக்கு செல்கின்றனர். எதிர்காலத்தில் இந்நாட்டிலுள்ள பெருவாரியான அரசியல்வாதிகளின் முகவரியாக மகஸின் சிறைச்சாலை மாறக்கூடும். அவர்களின் மக்களின் பணத்தையே கொள்ளையடித்துள்ளனர். 

கடந்த காலங்களில் ஜனாதிபதிகள்கூட இரு சம்பளங்களை பெற்றுவந்தனர். எம்.பிக்களாக இருந்ததற்குரிய சம்பளத்தையும் பெற்றனர். ஜனாதிபதிக்குரிய சம்பளத்தைபெறும் பெற்றனர். ஆனால் எமது ஜனாதிபதி அவ்வாறு செயற்படுவதில்லை. ஜனாதிபதி மாளிகைகளைக்கூட நிராகரித்துள்ளார். எமது அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களும் அப்படிதான். எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய சம்பளத்தை மட்டுமே பெறுகின்றோம்." - என்றார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05