Jun 24, 2025 - 12:40 PM -
0
சீரான வளர்ச்சி, தொடர்புபட்ட தரப்பினருக்கான மதிப்புருவாக்கம், மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நிலைபேற்றியல் ஆகியவற்றின் மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பைக் காண்பிக்கும் வகையில், 2025 ம் ஆண்டின் முதற்காலாண்டில் நெகிழ்திறன் கொண்ட பெறுபேறுகளை SDB bank வெளியிட்டுள்ளது. தொழிற்துறைவாரியாக சவால்கள், மற்றும் தற்போது இடம்பெற்று வருகின்ற நிதியளிப்பு கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும், நிதியியல் ஸ்திரத்தன்மை, தொழிற்பாட்டுத் திறன், மற்றும் அனைவரையும் அரவணைக்கும் வங்கிச்சேவை தீர்வுகள் ஆகியவற்றில் வங்கி தொடர்ந்தும் வலுவான கவனம் செலுத்தியுள்ளது.
2025 மார்ச் 31 ம் திகதியில் முடிவடைந்த காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 56 மில்லியன் தொகையை வங்கி பதிவு செய்துள்ளது. தேறிய வட்டி இலாப வரம்பு (Net Interest Margin - NIM) 42 அடிப்படைப் புள்ளிகளால் (basis-point) மேம்படுத்தப்பட்டமை காரணமாக இது 5.60% ஆக அதிகரித்துள்ளதுடன், கடன் வழங்கல்களுக்கான வட்டி வீதங்கள் மற்றும் உச்சப்பயனாக்கம் செய்யப்பட்ட கடன் வழங்கல் கலப்பு ஆகியவற்றில் மூலோபாய சீரமைவுகளையும் பிரதிபலிக்கின்றது. முன்னைய ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்கு என்ற அடிப்படையில் தேறிய வட்டி வருமானம் சற்று வீழ்ச்சி கண்டுள்ள போதிலும், வங்கியின் கட்டண அடிப்படையிலான வருமான மார்க்கங்கள் வலுவான வளர்ச்சிப்போக்கினைக் காண்பித்துள்ளதுடன், தேறிய கட்டணம் மற்றும் கமிஷன் வருமானம் 53% ஆல் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் முறைமையைக் கைக்கொள்ளல் மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் தீர்வுகள் வளர்ச்சி கண்டுவருவதன் பலனை இது பிரதிபலிக்கின்றது.
சாதகமான நடவடிக்கையாக அமையும் வண்ணம், மதிப்புக்குறைப்பு கட்டணங்கள் 2024 ன் 1 ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 31% ஆல் குறைவடைந்துள்ளதுடன், தீவிரமான மீள்அறவீடுகள், இடர் கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தீர்வளிக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியான மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன. கட்டம் 3 (Stage 3) கடன்களுக்கான வங்கியின் காப்பு வீதம் (coverage ratio) 2024 ம் ஆண்டின் முடிவில் காணப்பட்ட 47.78% இலிருந்து மேம்பட்டு, 2025 மார்ச் 31 ல் 49.72% ஆக பதிவாகியுள்ளது. வலுப்படுத்தப்பட்ட கடன் இடர் முகாமைத்துவத்திற்கு இது சான்றாக உள்ளது.
வங்கியின் மொத்த சொத்துத் தளம் 2% என்ற சிறிதளவு வீழ்ச்சிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அதிக வட்டிச் செலவுடன் பெற்ற கடன்களைத் தீர்த்தமை மற்றும் நாணய மதிப்பேற்றம் ஆகியனவே இதற்கு பிரதான காரணம். எனினும், வாடிக்கையாளர் கடன்கள் மற்றும் முற்பணங்கள் இக்காலாண்டில் ரூபா 2 பில்லியன் தொகையால் அதிகரித்துள்ளதுடன், இது படிப்படியாக கடன் தேவையிலிருந்து மீட்சி காண்பதைக் குறிக்கின்றது. அதேசமயம், SDB bank ன் பணப்புழக்க காப்பு விகிதம் தொடர்ந்தும் 234.15% என்ற வலுவான ஸ்தானத்தில் காணப்படுவதுடன், இது குறைந்தபட்ச ஒழுங்குமுறை தேவைக்கும் மிக அதிகமாகவுள்ளதுடன், சந்தைச் சுழற்சிகள் மத்தியில் நம்பிக்கையையும் உறுதிப்படுத்துகின்றது.
முன்னைய ஆண்டிலிருந்து இந்த ஆண்டை ஒப்பிடுகையில், நிர்வாகச் செலவுகள் இக்காலாண்டில் 10% ஆல் அதிகரித்துள்ளதுடன், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணியாளர் ஊதிய திருத்தங்கள் ஆகியவையே இதற்கான பிரதான காரணங்கள். இருப்பினும், ஒட்டுமொத்த வினைதிறனை பேணுவதில் வங்கி தொடர்ந்தும் விவேகமான வழிகளில் செலவுக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
SDB bank ன் நிறைவேற்றுப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கபில ஆரியரட்ண அவர்கள் இப்பெறுபேறுகள் குறித்து கருத்து வெளியிடுகையில், “1 வது காலாண்டில் நாம் ஈட்டியுள்ள பெறுபேறுகள் ஐந்தொகை முகாமைத்துவம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மதிப்பைத் தோற்றுவித்தல் ஆகியவற்றில் ஒழுக்கமான அணுகுமுறையைப் பிரதிபலிக்கின்றன. நெகிழ்திறன் கொண்ட பிரதான வருவாய்கள், தரமான சொத்துக்கள் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ச்சி, மற்றும் தளம்பலைக் குறைக்கும் அதேசமயம் நிலைபேற்றியலை ஊக்குவிக்கும் கடன் வழங்கல் மூலோபாயம் ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். அனைவரையும் அரவணைக்கும் நிதி வழங்கல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை மேம்படுத்தல், மற்றும் டிஜிட்டலை உள்வாங்கிக் கொள்வதற்கு இடமளித்தல் ஆகியவற்றின் மீது நாம் தொடர்ந்தும் ஆழமான அர்ப்பணிப்புடன் உள்ள அதேசமயம், வலுவான மூலதனம் மற்றும் பணப்புழக்க ஸ்தானம் ஆகியற்றுடன் நாம் தொடர்ந்தும் பயணிப்போம்,” என்று குறிப்பிட்டார்.
16.40% மொத்த மூலதன போதுமை விகிதம் (Total Capital Adequacy Ratio) மற்றும் 15.01% பங்கு அடுக்கு 1 விகிதம் (Equity Tier 1 Ratio) ஆகியவற்றுடன் இக்காலாண்டை நிறைவு செய்துள்ள SDB bank, எதிர்கால கடன் வழங்கல் மற்றும் வளர்ச்சி முயற்சிகளுக்கு துணைபுரிவதில் தனது ஆற்றலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில் வங்கியின் சொத்துக்கள் மீதான வருவாய் (Return on Assets - ROA) 0.82% ஆக காணப்பட்டதுடன், பங்கு மீதான வருவாய் (Return on Equity - ROE) 1.53% ஆக காணப்பட்டது.
முதலீட்டாளர்கள் மத்தியில் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை, டிஜிட்டல் உட்கட்டமைப்பு முயற்சிகள், மற்றும் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சர்வதேச நாணய நிதியத்துடனான ஈடுபாடு ஆகியவற்றின் துணையுடன், இலங்கையில் மறுசீரமைப்புடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற பொருளாதார வளர்ச்சி மேம்பட்டு வருகின்றது. தேசத்தின் அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதற்கு SDB bank தொடர்ந்தும் சிறப்பான ஸ்தானத்தில் உள்ளது. 94 கிளைகள் மத்தியில் வலுவான பிரசன்னம், சூழல், சமூகம் மற்றும் ஆட்சி நிர்வாகம் (ESG) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் கவனம் ஆகியவற்றுடன், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிச்சேவை மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகளுடன் வங்கி தொடர்ந்தும் முன்னிலை வகித்து வருகின்றது.
SDB bank குறித்த விபரங்கள்:
எதிர்காலத்திற்கு தன்னை தயார்படுத்தியுள்ள ஒரு வங்கியாக, ஒவ்வொருவரினதும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட, விரிவான சேவைகளை SDB bank வழங்கி வருகின்றது. இது இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாக இயங்கி வருவதுடன், கொழும்பு பங்குச்சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தப்பட்டு, BB +(lka) என்ற Fitch Rating கடன் தர மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. நாடளாவியரீதியிலுள்ள 94 கிளைகளின் வலையமைப்பினூடாக நாடெங்கிலுமுள்ள தனது தனிநபர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வர்த்தக வங்கிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு பல்வகைப்பட்ட விரிவான நிதிச் சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. சூழல், சமூகம் மற்றும் ஆட்சி நிர்வாக (ESG) கோட்பாடுகள் SDB bank மரபாண்மையில் ஆழமாக உட்பொதிந்துள்ளதுடன், நிலைபேணத்தக்க நடைமுறைகள் மூலமாக உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் வலுவான கவனம் செலுத்தியுள்ளது. இலங்கையை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்வதில் குறிப்பாக, பெண்களுக்கு வலுவூட்டுதல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் நிலைபேணத்தக்க அபிவிருத்தி, மற்றும் டிஜிட்டல்ரீதியாக அனைவரையும் அரவணைப்பதில் வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது.

