Jun 24, 2025 - 04:34 PM -
0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய், கமலை வைத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் இதற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளது. இதனால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியான வண்ணம் உள்ளன.
கூலி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. சிக்கிட்டு என தொடங்கும் இந்த பாடலை அனிருத் இசையில் டி.ராஜேந்தர் பாடியுள்ளார். இப்பாடலுக்கு அறிவு பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்திருக்கும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோவில் அனிருத் மற்றும் டி ராஜேந்தரும் இணைந்து நடனமாடி உள்ளார்களாம். கூலி திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. அனைத்து மொழிகளிலுமே கூலி என்கிற பெயரில் தான் இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கூலி படத்தின் இந்தி வெர்ஷனுக்கு மட்டும் தலைப்பை மாற்றி உள்ளனர். அதன்படி இந்தியில் இப்படம் மஜாதூர் என்கிற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏனெனில் இந்தியில் ஏற்கனவே அமிதாப் பச்சன் நடிப்பில் கூலி என்கிற கிளாசிக் ஹிட் படம் உள்ளது. இதுதவிர வருண் தவான் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு கூலி நம்பர் 1 என்கிற திரைப்படமும் ரிலீஸ் ஆனது.
இப்படி ஒரே பெயரில் ஏற்கனவே இரண்டு படங்கள் வந்துவிட்டதால் ரஜினி நடித்த கூலி திரைப்படம் இந்தியில் மஜாதூர் என்கிற பெயரில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், நாகர்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது.
தங்கக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து உள்ளது.
இப்படம் சுமார் 250 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இந்த ஆண்டு கோலிவுட்டில் 1000 கோடி வசூல் செய்யும் படமாக கூலி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.