Jun 24, 2025 - 06:19 PM -
0
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி போலி சமூக ஊடகக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த மிருககாட்சிசாலை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
Dehiwala Zoo - இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலை" என்ற போலி சமூக ஊடகக் கணக்கைப் பராமரித்து, மிருகக்காட்சிசாலையின் நற்பெயரை தவறாகப் பயன்படுத்தி பேஸ்புக் கணக்கு பயனர்களிடமிருந்து பணம் பெறப்படுகின்றமை தொடர்பில் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேஸ்புக் கணக்குடன் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மிருகக்காட்சிசாலை, தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஆண்டு நிறைவையொட்டி ஒரு சீட்டிழுப்பு நடத்தப்படும் என்றும், சீட்டிழுப்பின் முடிவில் வெற்றியாளர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்றும் கூறி பணம் பெறப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது.
அதன்படி, மிகுந்த புகழ் பெற்றுள்ள தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் நற்பெயரையும் நம்பகத்தன்மையையும் சேதப்படுத்தும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ கடிதம் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, சமூக ஊடகங்கள் மூலம் மிருகக்காட்சிசாலையின் பெயரைப் பயன்படுத்தி செய்யப்படும் இந்த நிதி மோசடி குறித்து கவனம் செலுத்தி, இதை விரைவில் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பணிப்பாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.