Jun 25, 2025 - 10:05 AM -
0
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவரின் தலைமையில் நடைபெறும் மாநாடு, இன்று (25) கொழும்பு கோட்டை, டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு இன்று (25) மற்றும் 2025.06.27 முதல் 2025.07.05 வரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் ஏராளமான போரா சமூகத்தினர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், மேற்படி தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதேபோல், 2025.06.27 முதல் 2025.07.05 வரை காலை 07:00 முதல் காலை 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் போரா மாநாடு நடைபெறவுள்ளது.
அந்த நாட்களில் வெள்ளவத்தை திசையிலிருந்து கடற்கரை வீதி வழியாக பம்பலப்பிட்டி ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கியும், கொள்ளுப்பிட்டியிலிருந்து பம்பலப்பிட்டி ஊடாக வெள்ளவத்தை நோக்கியும் கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவும் மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.
மேலும், பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள கிளென் ஆபர் திசைக்கு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, காலி வீதியிலிருந்து கிளென் ஆபர் பகுதிக்கு நுழைந்து கடற்கரை வீதிக்கு போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள ஆதமலி பகுதிக்கு வாகன நுழைவு அப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

