Jun 25, 2025 - 12:21 PM -
0
கொமர்ஷல் வங்கியானது மகளிர் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிப்புள்ள பெண் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் அதன் முதலாவது பிரத்தியேக மகளிர் வங்கி நிலையத்தை ஆரம்பித்துள்ளது. இது பெண்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
‘அணகி மகளிர் வங்கி’ நிலையம்’ என்று பெயரிடப்பட்ட இந்த நிலையமானது அண்மையில் யாழ்ப்பாணக் கிளையில் திறந்து வைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் இலக்கம் 474 இல் அமைந்துள்ளது.
பெண் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அணகி மகளிர் வங்கி நிலையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, குழந்தைகள் விளையாடும் பகுதி, பிரத்தியேக அடகு பிரிவு, ஆலோசனை பிரிவு, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், எந்தவொரு கொமர்ஷல் வங்கி கிளையிலும் வழங்கப்படும் முழு அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் வழங்குகிறது.
இந்த முயற்சியின் மூலம், வங்கி பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, அதே போல் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் பெண்களை வலுப்படுத்துவதற்குமான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக வங்கி தெரிவித்துள்ளது. பிரத்தியேகமான ‘அணகி மகளிர் வங்கி நிலையம்’, பெண்கள் எதிர்கொள்ளும் தேவைகள், விருப்பங்கள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குவதன் மூலம் பாரம்பரிய வங்கி முறைக்கு அப்பால் சென்று, விரிவான வங்கி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
‘அணகி மகளிர் வங்கி நிலையத்தின்’ திறப்பு விழாவில் கொமர்ஷல் வங்கியின் மனிதவள முகாமைத்துவ பிரதிப் பொது முகாமையாளர் திரு. இசுறு திலகவர்தன மற்றும் வங்கியின் சிரேஷ்ட மற்றும் பெருநிறுவன நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு, இந்த மைல்கல் முயற்சியின் மூலோபாய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினர்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

