Jun 25, 2025 - 04:07 PM -
0
நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் இந்திரன் ரூபசாந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிக்கு தெரிவு செய்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ. எல். எம். அஸ்மி மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி ஆகியோர் தலைமையில் சபை மண்டபத்தில் இன்று (25) நடைபெற்றது.
புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 13 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் சமூகமளித்திருந்தனர்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச சபையில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் 05 உறுப்பினர்களும், சுயேச்சை குழுவின் சார்பில் 05 பேரும், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 02 பேரும், தேசிய மக்கள் கட்சி சார்பில் ஒருவரும் என 13 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது உள்ளூராட்சி ஆணையாளர் புதிய தவிசாளருக்கான முன்மொழிவுகளை கோரினார்.
இந்நிலையில் இது குறித்து பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடாத்துவதா என வாக்கெடுப்பு இடம்பெற்றது. இதன் பொழுது பகிரங்க வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 8 வாக்குகளும் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 5 பேரும் ஆதரவு வழங்கினர்.
இதன் போது பெரும்பாலான உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பினை கோரினர். இதற்கமைய உறுப்பினர்களால் பிரேரிக்கப்பட்டு வழிமொழியப்பட்ட இரண்டு புதிய தவிசாளர் தெரிவு உறுப்பினர்களும் பகிரங்க வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களால் புதிய தவிசாளராக தெரிவு செய்ய கோரப்பட்டது.
இதன்போது நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளரை சபையின் 13 உறுப்பினர்களில் தமிழ் அரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சுயேட்சைக் குழு உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக பிரதிநிதிகள் ஆதரித்தனர்.
தமிழ் அரசுக் கட்சி சார்பில் புதிய தவிசாளராக போட்டியிட்ட இந்திரன் ரூபசாந்தன் என்பவர் 8 ஆசனங்களை பெற்று நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக தெரிவானார். எதிராக போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி சார்பில் மற்றுமொரு தவிசாளர் வேட்பாளரான குஞ்சரமூர்த்தி நிரொஜன் என்பவர் 5 ஆசனங்களை பெற்ற நிலையில் மூன்று மேலதிக வாக்குகளால் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இந்திரன் ரூபசாந்தன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
மேலும் கூட்டத்தின் தொடர்ச்சியாக உப தவிசாளர் தெரிவு நடைபெற்றதுடன் உதவி தவிசாளராக குணநாதன் புவனரூபன் ( சுயேட்சை குழு) தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராஜா கலையரசன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
--