வடக்கு
செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளராக தாஜுதீன் முகமது இம்தியாஸ் தெரிவு

Jun 25, 2025 - 05:27 PM -

0

செட்டிகுளம் பிரதேசசபை தவிசாளராக தாஜுதீன் முகமது இம்தியாஸ் தெரிவு

வவுனியா வெண்கல செட்டிகுளம் பிரதேசசபையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் ஆதரவுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ஐக்கிய மக்கள் சக்தி) உறுப்பினர் தாஜுதீன் முகமது இம்தியாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் தமிழரசுக்கட்சியை சேர்ந்த தேவசகாயம் சிவனாந்தராசா உபதவிசாளராக போட்டியின்றி  தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

வவுனியா செட்டிகுளம் பிரதேசசபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.

 

இதன்போது தவிசாளர் தெரிவை பகிரங்கமாக நடத்துமாறு 12 உறுப்பினர்களும் ரகசியமாக நடாத்துமாறு 6 உறுப்பினர்களும  வாக்களித்திருந்தனர்.

 

பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

 

அந்த வகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் இம்தியாஸுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட தாவீது இசையாஸ் மிரால் அவர்களுக்கு 6 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.

 

இதனடிப்படையில் முகமது இம்தியாஸ் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவருக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் மூன்று உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியின் இரண்டு உறுப்பினர்ளும்,ஜனநாயக தேசியகூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும், ஜக்கியமக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

 

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக தமிழரசுக்கட்சி சார்பில் தேவகசாகயம் சிவானந்தராசா போட்டியிட்டார்.

 

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் தமிழரசுக்கட்சியை சேர்ந்த அவர் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

 

இதேவேளை சுயேட்சைகுழு உறுப்பினர் ஒருவர் தவிசாளர் தெரிவின் போது வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05