Jun 25, 2025 - 05:50 PM -
0
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த், கொக்கைன் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை நுங்கம்பாக்கம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் முதல் வகுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில்,
'தான் தவறு செய்துவிட்டதாகவும், மகனை கவனிக்க ஜாமீன் தேவை' என்று கூறி ஸ்ரீகாந்த் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி தயாளன் நிராகரித்தார்.
NDPS சட்டத்தின் கீழ் இவ்வழக்கு தொடர்பான ஜாமீன் மனுக்கள் சிறப்பு NDPS நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிபதி தெளிவுபடுத்தினார். இந்த வழக்கு, முன்னாள் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி பிரசாத், நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கியது.
அவரது மொபைல் ஆய்வில், பிரதீப் குமார் என்பவர் மூலம் கொக்கைன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. பிரதீப், ஸ்ரீகாந்துக்கு பிரசாத் மூலம் கொக்கைன் வழங்கப்பட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, ஸ்ரீகாந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் முதலில் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று மறுத்தார்.
ஆனால், அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் போதைப் பொருள் பயன்பாடு உறுதியானதால், அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீகாந்த் தனது வாக்குமூலத்தில், பிரசாத் தயாரித்த படத்திற்கு 10 லட்சம் ரூபாய் சம்பளப் பாக்கி இருந்ததாகவும், அதற்குப் பதிலாக மூன்று முறை கொக்கைன் வழங்கப்பட்டதாகவும், பின்னர் தானாகவே கேட்டு அடிமையானதாகவும் கூறினார்.
அவர் 40 முறை 12,000 ரூபாய்க்கு ஒரு கிராம் கொக்கைன் வாங்கியதாகவும், 4.72 லட்சம் ரூபாய் Google Pay மூலம் பணம் செலுத்தியதாகவும் காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில், பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, குமுதம் ரிப்போர்ட்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ஸ்ரீகாந்துக்கு திடீரென ரசிகர்கள் முளைத்துள்ளனர்.
இத்தனை வருடங்கள் அவருக்கு படங்கள் இல்லை, இப்போது மகனை நினைத்து அழுவதாக பரிதாபப்படுகிறார்கள். கொக்கைன் பயன்படுத்தும்போது மகனை நினைக்கவில்லையா? அந்த நேரத்தில் கொடுமையாக தோன்றவில்லையா? திரைத்துறையில் பலர் இந்தப் போதைக் கலாசாரத்தில் சிக்கியுள்ளனர்,” என்று கூறி, இந்த விவகாரத்தை விமர்சித்தார்.
இவரது பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.