Jun 26, 2025 - 01:21 PM -
0
கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று (26) இடம்பெற்றது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கரைத்துறப்பற்று பிரதேச சபையின் ஆட்சி அமைப்பதற்காக எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் வாக்கெடுப்பு மூலமாக தவிசாளர் உப தவிசாளர் தெரிவு இடம்பெறுவதற்காக இன்றைய தினம் நாள் குறிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 8:30 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் கரைதுறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளருக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த தெரிவுகளுக்காக திறந்த வாக்கெடுப்பை தேர்வு செய்திருந்தனர்.
இந்நிலையில் தவிசாளராக இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்நிலையில் இருபத்தொரு உறுப்பினர்களில் இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் பதினொரு வாக்குகளையும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் நான்கு வாக்குகளையும், மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இமக்குலேற்றா புஸ்பானந்தன் ஜந்து வாக்குகளையும் பெற்றதோடு இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் மகாதேவா குணசிங்கராசா நடுநிலமை வகித்தார். இந்நிலையில் இலங்கைத் தமிழரசு கட்சியின் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
இதேவேளை உபதவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆகியோரது பெயர்கள் முன்மொழிபட்டு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன் ஒன்பது வாக்குகளையும், சுயேட்சை குழுவாக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர் வல்லிபுரம் வசந்தராசா ஆறு வாக்குகளையும் பெற்றுக்கொள்ள ஆறு உறுப்பினர்கள் நடுநிலமை வகித்தனர். இதன் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் யோகேஷ்வரன் அனோஜன்
உப தவிசாளராக அறிவிக்கப்பட்டார்.
--