Jun 27, 2025 - 06:01 PM -
0
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவருமான விஜயை, சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் (Consulate-General) தூதுவர் எட்கர் பாங் (Edgar Pang) மரியாதை நிமித்தமாக இன்று மதியம் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு விஜயின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு குறித்து எட்கர் பாங், தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
"கோலிவுட் சூப்பர் ஸ்டார் தளபதி விஜயை இன்று மதியம் சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது திரைப்படங்களில் உங்களுக்கு பிடித்த தமிழ் திரைப்படம் எது?" என்று குறிப்பிட்டு, இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக இருந்ததாகவும், இருவரும் சில நிமிடங்கள் உரையாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய், தற்போது தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் தமிழகத்தில் அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தப் பின்னணியில், சிங்கப்பூர் தூதுவரின் சந்திப்பு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
எட்கர் பாங், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தூதராகப் பணியாற்றி வருகிறார், இவர் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கு பொறுப்பாக உள்ளார்.
இவர், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்வதற்கும் பணியாற்றி வருகிறார்.
இந்தச் சந்திப்பு குறித்து மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் விஜயின் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் இதனை வரவேற்று, பல பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.