Jun 29, 2025 - 09:52 PM -
0
இந்த வருடத்தில் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பெறப்பட்ட முறைப்பாடுகளில் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது.
2025 ஜனவரி 1 முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,138 என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
2024 ஆம் ஆண்டு நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் உட்பட, தற்போது ஆணைக்குழுவிடம் உள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,221 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில், 224 முறைப்பாடுகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, 524 முறைப்பாடுகள் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், சட்டத்திற்குப் பொருத்தமற்றதாலும் விசாரணைக்கு உட்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 282 முறைப்பாடுகள் விசாரணைகளுக்காக வேறு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கடந்த 5 மாதங்களை உள்ளடக்கி தயாரித்து வௌியிடப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மொத்தமாக 44 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவற்றில் 25 சுற்றிவளைப்புகள் வெற்றியளித்ததோடு, 31 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாதங்களில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேல் நீதிமன்றத்தில் 42 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும், முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் 11 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 45 பேர் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஒருவர், சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், மாகாண முதலமைச்சர் ஒருவர் உட்பட 19 பேர் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட 272 வழக்குகள் தற்போது நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும் தொடர்புடைய முன்னேற்ற அறிக்கை குறிப்பிடுகிறது.

