Jun 30, 2025 - 09:51 AM -
0
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான பிரமாண்ட ஸ்டூடியோ உள்ளது. நேற்று தனது ஸ்டூடியோவுக்கு வந்த ஏ.ஆர்.ரகுமான் திரைப்படம் சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாலை 6.30 மணியளவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அங்கு நேரில் வந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை திடீரென சந்தித்தார். இந்த சந்திப்பு இரவு 7.10 மணி வரை நீடித்தது.
இவர்களின் இந்த திடீர் சந்திப்பு உறுதிபடுத்தப்பட்ட நிலையில், மத்திய அரசுக்கு நமது கலாசாரம் சம்பந்தப்பட்ட 'சத்யம், சிவம், சுந்தரம் எனும் வெவ்ஸ்' என்ற குறும்படத்துக்கு இசை அமைத்து கொடுத்ததால் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அவர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நன்றி சொன்னதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதற்கான எந்த விவரங்களும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.