Jun 30, 2025 - 03:26 PM -
0
DFCC வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இடம்பெற்று வருகின்ற தொடர் நிகழ்வுகளின் ஒரு அங்கமாக, சர்வமத அனுட்டானங்கள் நாடெங்கிலும் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதான வைபவத்துடன் அவை ஆரம்பித்தன. பௌத்த, இந்து, கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாம் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மதகுருமார் இந்நிகழ்வில் நல்லாசிகளை வழங்கியதுடன், வங்கியின் தலைவர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.
இதே சமயத்தில் அனுராதபுரம் ருவான்வெலி மகாசாய, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில், மற்றும் நீர்கொழும்பு, புனித செபஸ்தியன் தேவாலயம் ஆகியவற்றிலும் சமய வழிபாடுகள் இடம்பெற்றன. வங்கியின் 138 கிளை வலையமைப்பின் கீழுள்ள அனைத்து பணியாளர்களும் தத்தமது கிளையிலுள்ள தொலைக்காட்சி வாயிலாக தலைமை அலுவலகத்தின் இடம்பெற்ற வழிபாடுகளில் இணைந்து கொண்டதுடன், ஐக்கியம், நோக்கம், மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றின் மீதான ஆழமான உணர்வைப் பிரதிபலித்திருந்தனர்.

