Jun 30, 2025 - 05:41 PM -
0
ஆடைத்தொழில்சாலைக்கு வேலைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏற முற்பட்ட தாய் ஒருவருக்கு பின்னால் சென்ற 3 வயது சிறுவன், பஸ் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் இன்று (30) பிற்பகல் 1.30 மணி அளவில் மட்டக்களப்பு ஆரையம்பதி காளிகோவில் வீதியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதை அடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் ஆரையம்பதி முதலாம் பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 3 வயதுடைய பிரகாஷ் றிகோஸ்வரன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த வீதியைச் சேர்ந்த தாயார் ஆரையம்பதியிலுள்ள ஆடைத்தொழில்சாலையில் வேலைபார்த்துவரும் நிலையில், சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் கம்பனி பஸ்ஸில் வேலைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து பஸ் வண்டியில் ஏற முற்பட்டபோது தாய்க்கு பின்னால் வந்த குழந்தை பஸ்வண்டி ரயரினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--