Jul 1, 2025 - 10:20 AM -
0
'சர்வதேச சட்டத்தின் பிரகாரம் சட்டப்பூர்வமாகவே கச்சத்தீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்டது. எனவே, அதனை ஒருபோதும் மீள கையகப்படுத்த முடியாது' என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வடக்கு கடற்பரப்புக்குள் இந்திய ரோலர் படகுகள் சட்டவிரோதமாக நுழைகின்றன. இதனால் கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது. வடக்கிலுள்ள சனத்தொகையில் 30 சதவீதமானோர் கடற்றொழிலையே நம்பி உள்ளனர். எனவே, இது அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும்.
தமிழ் நாட்டில் தேர்தலொன்று நெருங்கும்வேளை கச்சத்தீவு விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு எனவும், அதனை மீளப்பெறுவோம் என்றெல்லாம் கதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டு வாக்கு வேட்டை நடத்தப்படும். இது எந்நாளும் கூறப்படும் கதையாகும்.
எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சரும் சில நாட்களுக்கு முன்னர் இதேபோன்றதொரு கருத்தை வெளியிட்டுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது தவறு.
தமிழக மீனவர்கள் ரோலர் படகுகள்மூலம் மீன்வளத்தை மட்டுமல்ல எமது கடல்வளத்தையும் நாசமாக்குகின்றனர். இந்நிலைமை தொடர்ந்தால் இன்னும் 15 - 20 வருடங்களில் எமது கடல்வளம் பாலைவனமாகிவிடும்.
அதேவேளை, இராஜதந்திர ரீதியில் - சட்டப்பூர்வமாக - சர்வதேச சட்டத்தின் பிரகாரமே இலங்கைக்கு கச்சத்தீவு கிடைக்கப்பெற்றுள்ளது. எனவே, அதனை எவராலும் மீண்டும் கையகப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்தார்.