Jul 1, 2025 - 12:03 PM -
0
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வியாபாரிகளைக் கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி மூலம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால், அரிசியை உரிய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்களை கண்டுபிடிக்க சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் தொடர்பில் பாவனையாளர்கள், நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அலுவலக நேரங்களில் 1977 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசி விற்பனையில், வெள்ளை மற்றும் சிவப்பு பச்சரிசியின் கட்டுப்பாட்டு விலை ஒரு கிலோ 220 ரூபாவாகவும், வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேகவைத்த வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா ஒரு கிலோ 240 ரூபாவாகவும், கீரி சம்பா கிலோவிற்கு 260 ரூபாவாகவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

