Jul 1, 2025 - 08:48 PM -
0
2024 ஆம் ஆண்டில் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 42.22% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டிற்கான அதன் வருடாந்திர செயல்திறன் அறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நேற்று (30) வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி வருவாய் ரூ. 2,740.44 பில்லியனாக இருந்தது போதும், இது இலக்கு வருவாய்க்கு ரூ. 120.38 பில்லியனால் பின்தங்கி 2,620.07 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாய் இலக்கு வருவாயை சுமார் 96% அடைவதைக் குறிப்பதுடன், இது பொருளாதார செயல்திறனில் பாராட்டத்தக்க முன்னேற்றத்தையும் வரி வசூல் உத்திகளின் செயல்திறனையும் குறிக்கிறது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட உண்மையான வருவாய் ரூ. 1,842.32 பில்லியனாவதுடன், இது கடந்த ஆண்டில் ரூ. 2,620.07 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் வரி வருவாய் வசூலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், இது பொருளாதார நிலைமையில் முன்னேற்றத்தையும், திறமையான வரி நிர்வாகத்தையும் குறிக்கிறது என்று இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 நிதியாண்டில், அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ. 4.3 டிரில்லியனாக அதிகரித்துள்ளதுடன், இது 2023 ஆம் ஆண்டை விட சுமார் 32.21% அதிகரிப்பைக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு, அரசாங்கம் ரூ. 3704.58 பில்லியன் மொத்த வரி வருவாயைப் பதிவு செய்ததுடன், இதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரூ. 2,620.07 பில்லியன் பங்களித்தது.
இது மொத்த வருவாயில் 70.73% ஆகும், மேலும் இந்தத் திணைக்களம், தேசிய வரி அமைப்பில் அதன் முன்னணி பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அதன் செயல்திறன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிசம்பர் 31, 2024 நிலவரப்படி வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை 672,433,871 என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டில் விதிக்கக்கூடிய மொத்த வரிகள் மற்றும் அபராதங்கள் ரூ. 175,697 மில்லியன் ஆகும்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலக்கு வரி வருவாய் விகிதம் 15% ஆக இருந்தாலும், தற்போதைய விகிதம் 12.39% என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
உள்நாட்டு நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் நீண்டகால பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் வரி தளத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அதன் ஆண்டு செயல்திறன் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

