Jul 1, 2025 - 09:21 PM -
0
தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக இன்று (01) மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் மூலம் 22,294 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, நுளம்புகள் பெருகக்கூடிய 4,965 இடங்கள் கண்டறியப்பட்டதாகவும், நுளம்பு குடமிகள் உள்ள 657 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் 553 பேருக்கு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டதாகவும், தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்தார்.
மேலும், 153 பேருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நேற்றும் இன்றும் மொத்தமாக 48,354 இடங்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் நுளம்பு குடமிகள் பெருகக்கூடிய 10,591 இடங்கள் கண்டறியப்பட்டதாகவும், இது ஒவ்வொரு 10 இடங்களில் ஒரு இடம் என்ற விகிதத்தில் உள்ளதாகவும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர, 1,611 இடங்களில் நுளம்பு குடமிகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றில் 1,193 சிவப்பு அறிவிப்புகளும், 256 வழக்கு தொடரல்களும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நேற்று (30) ஆரம்பிக்கப்பட்டு, வரும் 05ஆம் திகதி வரை செயல்படுத்தப்படவுள்ளது.

