Jul 2, 2025 - 11:26 AM -
0
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பிர்மிங்காமில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் இருந்த ஒரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணி இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறது. அதற்கு அருகில்தான் சென்டினரி ஸ்கொயர் என்ற பகுதி உள்ளது. அங்கு ஒரு பார்சல் கேட்பாரற்று கிடந்தது. நீண்ட நேரமாக அதை எடுக்க யாரும் வராததால், அது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அங்கு விரைந்த பொலிஸார் அந்தப் பகுதியில் இருந்த மக்களை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர்.
இந்திய வீரர்கள் தங்கள் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என தகவல் அனுப்பப்பட்டது. மதியம் மூன்று மணி அளவில் இந்த நடவடிக்கைகள் நடந்தன. இதையடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என பரபரப்பு நிலவியது.
பின்னர் அந்தப் பார்சல் குறித்து பொலிஸார் ஆய்வு செய்தனர். சிறிது நேரம் கழித்து, அந்தப் பார்சலில் பயப்படும்படியாக எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியானது.
இது குறித்து இந்திய அணியின் செய்தி தொடர்பாளரிடம் ஊடகங்கள் தொடர்பு கொண்டு பேசின.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
'பயப்படும்படி ஒன்றுமில்லை. அனைவரும் நலமாக இருக்கிறோம்,' என்று கூறினார். அந்த மர்ம பார்சல் ஏற்படுத்திய பரபரப்பால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு அதிக அளவில் பாதுகாப்பு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இன்று (02) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.