Jul 2, 2025 - 04:39 PM -
0
நாட்டின் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேலும் வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முயற்சியாக, Coca-Cola Beverages Sri Lanka (CCBSL) மற்றும் Neptune Recyclers உடன் இணைந்து இலங்கையில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கான Give Back Life என்ற திட்டத்தின் கீழ் ஒரு புதிய பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உத்தியோகபூர்வ அறிமுக விழா CCBSL தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்றதுடன், மேல் மாகாண ஆளுநர் மாண்புமிகு ஹனிப் யூசூப் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அத்துடன், CCBSL நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே மற்றும் Neptune Recyclers நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம் ஆகியோருக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த திட்டம் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சமூக அடிப்படையிலான மறுசுழற்சி உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதோடு, சுற்றுலாத்துறையையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டாண்மை இரண்டு முக்கிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. முதல் திட்டம் மேல் மாகாணத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இது குறிப்பிட்ட பயிற்சித் திட்டங்கள் மூலம் புதிய கழிவு சேகரிப்பாளர்களை அடையாளம் காண்பதன் மூலமும், அவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து ஆதரவை வழங்குவதன் மூலமும் கழிவு சேகரிப்பு முயற்சிகளை பலப்படுத்துவதே இதன் நோக்கம். இந்தப் பயிற்சிகள் கழிவு வகைப்படுத்துதல், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் சிறந்த செயல்முறைகள் பற்றிய விரிவான வழிகாட்டுதலை வழங்குகின்றன. இதன்மூலம் சேகரிப்பாளர்கள் தங்களது பணியை திறமையாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள நன்கு ஆயத்தமாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்த முயற்சி எடை அளவிகள் மற்றும் பொதி கட்டும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஏற்கனவே உள்ள பொருள் மீட்பு வசதி நிலையங்களை (Material Recovery Facilities - MRFs) வலுப்படுத்தும். இந்த வசதி நிலையங்கள் சரியான வகைப்படுத்துதல் மற்றும் பொதி கட்டுதல் மூலம் மறுசுழற்சி பொருட்களின் செயல்திறன் மிக்க போக்குவரத்தை உறுதி செய்து, மற்ற சேகரிப்பாளர்கள் மற்றும் மறுசுழற்சி நிலையங்களுக்கு ஆதரவளிக்கும். மேலும், கழிவு சேகரிப்பாளர்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்பட்டு, அவர்களின் செயல்பாடுகளை விரிவாக்கவும் மேம்படுத்தவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கும்.
சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்காக, முக்கிய இடங்களில் புதிய பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். இந்த நிலையங்கள் பொதுமக்களின் அணுகலை எளிதாக்கி, பிளாஸ்டிக் மீட்பு முயற்சிகளை மேம்படுத்தும். இதன் மூலம் இலங்கையின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் நிலைபேறாண்மை இலக்குகளுக்கு நேரடியாக பங்களிப்புச் செய்யும்.
இந்த கூட்டாண்மையின் கீழ் இரண்டாவது திட்டம் மாது கங்கை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தியில் கவனம் செலுத்துகிறது. மாது கங்கை என்பது கடலுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான சதுப்புநில சூழலியல் அமைப்பாகும். இதில் 15 தீவுகள் உள்ளன. இது இலங்கையின் மிகவும் பல்லுயிர் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும், நாட்டின் முதல் Ramsar ஈரநில தளமாகவும் உள்ளது. இப்பகுதி பல உள்ளூர் மற்றும் தனித்துவமான உயிரினங்களுக்கு இருப்பிடமாக இருப்பதோடு, அதன் வனவிலங்கு சஃபாரிகள் மற்றும் சதுப்புநில படகு சுற்றுலாக்களுக்காக உள்ளூர் மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானதாக உள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சிறிய அளவிலான உள்ளூர் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் மாது கங்கையில் ஒரு மிதக்கும் சந்தை அமைக்கப்படும். இதனுடன் சேர்த்து, உள்ளூர் கழிவு மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவதற்காக இப்பகுதி முழுவதும் பல பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும்.
இத்திட்டம் தொடர்பில் Coca-Cola Beverages Sri Lanka நிறுவனத்தின் பொது விவகாரங்கள், தகவல் தொடர்பு மற்றும் நிலைபேறாண்மைக்கான பணிப்பாளர் தமரி சேனநாயக்க கூறுகையில், Neptune Recyclers நிறுவனத்துடனான இப்புதிய கூட்டாண்மை, முறையான PET பிளாஸ்டிக் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பின் மூலம் இலங்கையில் சுழற்சி பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் எமது பயணத்தில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். ஓன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நாம் நிலைபேறான கழிவு முகாமைத்துவ தீர்வுகளுக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், PET பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவ விநியோகச் சங்கிலியில் உள்ள முக்கிய இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் ஒரு அமைப்பையும், சேகரிப்பாளர்களின் நலனுக்கு உதவுவதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் உருவாக்குகிறோம். என தெரிவித்தார்.
ஒரு அறிக்கையில், Neptune Recyclers நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அப்துல்லாஹ் காசிம் கருத்து தெரிவிக்கையில், நிலைபேறாண்மை வளர்ச்சி தொடர்பான Neptune இன் அணுகுமுறை மறுசுழற்சிக்கு அப்பாற்பட்டது. இது மீள்தன்மை கொண்ட சமூகங்களை உருவாக்குவது மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பது பற்றியதாகும். Coca-Cola Beverages Sri Lanka உடனான எமது கூட்டாண்மை, பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. புத்தாக்கத்தை சமூகப் பொறுப்புணர்வுடன் இணைப்பதன் மூலம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல முடியும் என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம். என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்முயற்சிகள் அனைத்தும் சேர்ந்து, உயிர்த்துடிப்பான மற்றும் நிலைபேறான உள்ளூர் பொருளாதாரத்தை உருவாக்குவதையும், தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதையும், பிளாஸ்டிக் மீட்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், நீண்டகால பல்லுயிர் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.