Jul 2, 2025 - 11:30 PM -
0
வவுனியா சமயபுரம் பகுதியில் மனைவி மற்றும் அவரது தாயாரை கத்தியால் குத்தி காயப்படுத்திய குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சமயபுரம் பகுதியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீட்டிற்கு இன்று இரவு வருகைதந்த உயிரிழந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணையும் அவரது தாயாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீட்டையும் தீ வைத்து கொழுத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த இரு பெண்களும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த குற்றச்செயலை புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் அந்த வீட்டின் கிணற்றில் வீழ்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்த குடும்பஸ்தரும், காயமடைந்த பெண்ணும் வெவ்வேறு பகுதிகளை சேந்தவர்கள் என கிராமமக்கள் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாக கடந்த ஒரு வருட காலமாக சமயபுரம் பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்தனர். அத்துடன் அவர்கள் இருவரும் ஏற்கனவே வெவ்வேறு திருமணங்களை முடித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது.
சம்பவத்தில் வசந்தி வயது 30, அவரது தாயாரான இந்திரா வயது 69, என்ற இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஸ்ணகுமார் வயது 45 என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--

