Jul 3, 2025 - 08:31 PM -
0
இன்று (03) காலை 10 மணியளவில், கந்தானை பொது சந்தை அருகே அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலின் இலக்கு, காரில் பயணித்த சமீர மனஹர என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியவர் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீர மனஹரவின் முதுகில் குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த நபரான உபாலி அமுனுவில, சமீர மனஹரவின் மைத்துனன் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது, இருவரும் உடற்பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, சாரதி காரை பின்னால் செலுத்திய போது, அது அருகிலுள்ள மின் கம்பத்தில் கார் மோதியது. இதில் ஒரு பாதசாரி காயமடைந்தார். மேலும், அருகில் இருந்த பெண்ணின் ஒருவரின் கழுத்தில் கார் மீது பட்ட தோட்டா தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார், ஆனால் அவரது நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, 30 தோட்டாக்கள் கொண்ட T-56 மெகசினில் இருந்து 23 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடு, சமீர மனஹரவிற்கும், துபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கந்தானே கொண்ட ரஞ்சி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான சூட்டி மல்லி ஆகியோருக்கு இடையேயான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீர மனஹர, மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியபோது, போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த உபாலி குலவர்தனவின் மீதும் இதேபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கான உறுதியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு உள்ளிட்ட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, பொலிஸாரினால் தற்காலிக வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.