Jul 3, 2025 - 09:57 PM -
0
நேற்று (02) காலை 8 மணியளவில், ராகம கிம்புலாபிட்டி பகுதியில், குத்தகை நிறுவனம் ஒன்றைச் சேர்ந்ததாகக் கூறப்படும் குழுவால், ராகம, தேவத்த வீதியைச் சேர்ந்த சுமித் தர்ஷன என்பவர் தாக்கப்பட்டு, அவரது வாகனம் திருடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த சுமித், தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்தின் பின்னணி: ஒரு தம்பதியினர், தங்கள் காரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதை வாகன திருத்துமிடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு சுமித்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, சுமித் தனது உதவியாளர் மற்றும் குறித்த தம்பதியினருடன், அவர்களது வாகனத்தை ராகம கிம்புலாபிட்டி பகுதிக்கு தனது வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது, ஒரு முச்சக்கர வண்டி மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழு, சுமித்தைத் தாக்கி, அவரது வாகனத்தைத் திருடியதாக சுமித் தெரிவித்தார்.
தாக்குதலின் பின்னர், வீதியில் கிடந்த சுமித்தை ஒருவர் கைப்பேசியில் படம் பிடித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுமித் கூறுகையில், அவரது வாகனத்திற்கான குத்தகைத் தவணைகள் தொடர்பாக குத்தகை நிறுவனத்துடன் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள பின்னணியில், அந்நிறுவனம் "சீசர்கள்" எனப்படும் குழுவைப் பயன்படுத்தி வாகனத்தை இவ்வாறு எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில், குத்தகை நிறுவனம் ஒன்று இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளதாகவும், திருடப்பட்ட வாகனத்தின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கந்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு மீட்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.
வாகனம் ஒன்றிற்காக பெறப்பட்ட குத்தகைக் கொடுப்பனவு தவணைகளை உரிய வகையில் செலுத்தாத சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட வாகனத்தை கையகப்படுத்த குத்தகை நிறுவனத்தின் சட்டப்பூர்வ திறன் குறித்து நாங்கள் விசாரித்தோம்.
இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஷிரந்தி குணவர்தன, வாகனப் பறிமுதல் தொடர்பான சட்ட நடைமுறைகளை இவ்வாறு விளக்கினார்:
"வாகனத்தின் தவணைகள் செலுத்தப்படவில்லை என்றால், வாகனத்தை பறிமுதல் செய்ய முறையான சட்ட நடைமுறைகள் உள்ளன. பொலிஸில் முறைப்பாடு அளித்து, பொலிஸ் அதிகாரியுடன் வாகனத்தை பறிமுதல் செய்யச் செல்ல வேண்டும். அந்த இடத்தில் அமைதியை பேண பொலிஸ் அதிகாரி உடனிருப்பார். உரிமையாளர் ஆட்சேபித்து, தவணைகள் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினால், பொலிஸ் வாகனத்தை பறிமுதல் செய்ய அனுமதிக்காது. அத்தகைய சந்தர்ப்பங்களில், நீதிமன்ற உத்தரவு பெற வேண்டும். நிதி நிறுவனங்களோ வங்கிகளோ 'சீசர்களை' பயன்படுத்தி மக்களைத் துன்புறுத்துவதற்கு சட்டரீதியான உரிமை இல்லை." என்றார்.