Jul 6, 2025 - 03:20 PM -
0
பிள்ளையானின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவிலில் வைத்து கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கடந்த ஏப்பிரல் 8 ம் திகதி கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதம் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிள்ளையானிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர்வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் இனியபாரதியை குற்ற விசாரணைப் பிரிவினர் சம்பவதினமான இன்று காலை திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை கைது செய்து அம்பாறைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றஞ்சாட்டி வருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--

