Jul 6, 2025 - 09:42 PM -
0
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே Birmingham மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
608 என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்று 5ஆவது நாளாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 271 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக ஜெமி ஸ்மித் 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சில் ஆகாஷ் தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்திய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 587 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளை, இங்கிலாந்து அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 407 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 427 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
இந்திய அணி சார்பாக அணித்தலைவர் சுப்மன் கில் 161 ஓட்டங்களையும், ரவீந்திர ஜடேஜா 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான Birmingham டெஸ்டில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் சுப்மன் கில் 162 பந்துகளில் 161 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 13 பவுண்டரிகள் அடங்கும்.
கில் முதல் இன்னிங்ஸில் 269 ஓட்டங்கள் விளாசியிருந்தார். இதன்மூலம் அவர் ஒரே டெஸ்டில் 430 ஓட்டங்கள் குவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே போட்டியில் 400 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இரண்டாவது வீரர் சுப்மன் கில் ஆவார்.
அவர் மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (400), இலங்கையின் குமார் சங்கக்கார (424), மார்க் டெய்லர் (426) ஆகியோரை முந்தினார்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 456 ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.