Jul 7, 2025 - 01:22 PM -
0
இரண்டு மோட்டார் சைக்கிள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை, டீன் மாவத்தை ஊடாக போதைப் பொருள் கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய நேற்று (06) சோதனை நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டனர்.
இதன் போது அப்பகுதியினால் இரண்டு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த மூவரை கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸார் அவர்கள் வசம் இருந்து போதைப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.
இதன் போது 84 கிராம் 620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளினை வைத்திருந்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தின் திறந்த பிடிவிறாந்து பெற்ற நபர் என்பது தெரியவந்தது.
அத்துடன் மற்றுமொரு சந்தேக நபர் வசம் இருந்து 24 கிராம் 940 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், மூன்றாவது சந்தேக நபரிடம் இருந்து 31 கிராம் 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
அத்துடன் கைதான மூன்று சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்ட பொலிஸார் சட்ட நடவடிக்கைக்காக அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையானது அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில், அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த செனவிரத்னவின் மேற்பார்வையில் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தண்டநாராயணன் தலைமையில் அக்கரப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் டபிள்யூ.டி.எல்.ஜி.விமலதாச தலைமையிலான பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--