Jul 7, 2025 - 03:36 PM -
0
எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீர்த்த கடல்’ என்ற தலைப்பிலான ஆவணப்படமானது, மட்டக்களப்பிலுள்ள ‘Movie Club’ இன் ஒழுங்கமைப்பில் 21.06.2025 அன்று, சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ‘American Corner’ இல் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குபற்றியிருந்தனர்.
இத்திரையிடலில் பங்குபற்றியிருந்த பார்வையாளர்களில் ஒருவரான கேஷாயினி எட்மண்ட், “இது காலத்தின் தேவை கருதியதொரு ஆவணப்படம். இதன் காட்சியமைப்புகள் எனக்குப் பிடித்திருந்தன. குறித்த விடயம்சார் நூலினை எழுதியவரது நேர்காணலை உள்ளடக்கியிருந்தது மிகவும் வரவேற்கத்தக்கது. பலரும் இப்போது சுற்றாடல்சார் பிரச்சினைகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” எனவும், “ஆவணப்படத்தின் நேரத்தினைச் சுருக்குவது, சுவாரசியமாக்குவது, தொழில்நுட்பத் தரம் போன்றன குறித்தும் சிந்திக்க வேண்டும். பெண்களது நேர்காணல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்.” எனவும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
வடக்கு – கிழக்குத் தமிழர் தேசக் கடற்பரப்பில் கடல் விவசாயம் எனும் போர்வையில் அமைக்கப்படும் கடலட்டை வளர்ப்புப் பண்ணைகள் மூலம் கடலைச்சார்ந்த தமிழ் மக்களின் இறைமையும், நிலைத்த பொருண்மிய வளங்களும் எவ்வாறு சவாலிற்கு உட்படுத்தப்படுகின்றன? சூழற் சமநிலையும், கடலோரப் பகுதியில் வாழும் மக்களின் வாழ்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன? என்பவை பற்றி குறித்த ஆவணப்படமானது ஆராய்கின்றது.