Jul 7, 2025 - 04:37 PM -
0
சிம்பாப்வே அணிக்கு எதிராக புலாவாயோவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்க அணித் தலைவர் வியான் முல்டர் 367 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் (367*) எடுத்து, தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
ஹஷிம் அம்லாவின் 311* ஓட்டங்கள் சாதனையை முறியடித்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் அணித் தலைவராக அதிகபட்ச ஓட்டங்கள் (367*) எடுத்தவர் என்ற உலக சாதனையை நிலைநாட்டினார். நியூசிலாந்தின் கிரஹாம் டவுலிங்கின் 239 ஓட்டங்கள் (1968) சாதனை இதனூடாக அவர் முறியடித்துள்ளார்.
முல்டர் தனது 21ஆவது டெஸ்ட் போட்டியில், முதல் முறையாக தென்னாப்பிரிக்க அணியை வழிநடத்தி, இந்த வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
அவர் 297 பந்துகளில் மூச்சதம் (triple century) எட்டினார், இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது வேகமான முச்சதமாகும் (வீரேந்தர் சேவாக்கின் 278 பந்துகள், 2008).
எவ்வாறாயினும், முல்டர் பிரையன் லாராவின் 400* ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 636/5 என்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதன்போது, முல்டர் 367* ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
லாராவின் 400* ஓட்டங்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தனிநபர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக உள்ள நிலையில், இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

